» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வங்கி மேலாளரிடம் நூதன முறையில் ரூ.47 லட்சம் மோசடி: நெல்லை வாலிபர் கைது!

திங்கள் 6, அக்டோபர் 2025 10:11:45 AM (IST)

ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை காட்டி வங்கி மேலாளரிடம் ரூ.47 லட்சம் மோசடி செய்த நெல்லை வாலிபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகா, கனையார் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (36). இவர் அரியலூரில் உள்ள தனியார் வங்கி கிளையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் ராஜசேகர் தனக்கு கூகுளில் வந்த லிங்கை தொட்டு ஒரு டிரேடிங் குழுவில் இணைந்துள்ளார்.

இக்குழுவிலுள்ள அட்மின்கள் 500 சதவீதம் லாபம் பெறலாம் எனக் கூறி அறிவுரைகள் வழங்கியதையடுத்து, அவர்கள் கூறியபடி தனது செல்போனில் தனியார் செயலியை பதிவிறக்கம் செய்து, ஆன்லைன் வர்த்தகம் செய்து வந்துள்ளார். முதலில் ரூ.3 லட்சத்து 45 ஆயிரத்தை தனது வங்கி கணக்கின் மூலமாக எடுத்துள்ளார்.

மேலும் அதிக லாபம் பெறலாம் என பல்வேறு தவணைகளாக அவர்கள் கூறிய வங்கி கணக்கில் ரூ.46 லட்சத்து 90 ஆயிரத்தை செலுத்தி உள்ளார். இதனால் அந்த செயலியின் வாலட்டில் ரூ.25 கோடி சேர்ந்துள்ளது. இந்த பணத்தை எடுக்க முயற்சி செய்தபோது 2 சதவீதம் சேவை கட்டணமாக ரூ.50 லட்சத்தை கேட்டுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த ராஜசேகர் இது தொடர்பாக 1930 என்ற இணைய குற்ற உதவி எண் மூலமாக அரியலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், குற்ற செயலுக்காக பயன்படுத்திய வங்கி கணக்கு எண்ணின் உரிமையாளர் நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை புதுப்பேட்டை வடக்கு தெருவை சேர்ந்த சுப்ரமணியனின் மகன் வேலு (31) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அரியலூர் மாவட்ட கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின்படி, சைபர் கிரைம் கூடுதல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) முத்தமிழ்செல்வன் வழிகாட்டுதலின் பேரில், இன்ஸ்பெக்டர் இசைவாணி தலைமையிலான போலீசார் தலைமறைவாக இருந்த வேலுவை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 

முன்னதாக வேலுவிடம் இருந்து ரூ.5 லட்சம் மற்றும் 2 செல்போன்கள், 6 காசோலை புத்தகங்கள், 5 ஏ.டி.எம். அட்டைகள், வங்கி கணக்கு புத்தகம், ஆபீஸ் சீல் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory