» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கல்லூரி மாணவிகளுக்கான மாநில ஹாக்கி போட்டி: சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்!

புதன் 8, அக்டோபர் 2025 3:40:06 PM (IST)



பாளையங்கோட்டையில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவில் கல்லூரி மாணவியர்களுக்கான ஹாக்கி விளையாட்டுப் போட்டியினை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று (08.10.2025) முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவில் கல்லூரி மாணவியர்களுக்கான ஹாக்கி விளையாட்டுப் போட்டியினை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.இரா.சுகுமார், நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராபர்ட் புரூஸ், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி.ஆர்.மனோகரன், மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட ஊராட்சித் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அவர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நான்கு ஆண்டிற்கு மேல் விளையாட்டுத் துறையில் மிகவும் பெரிய எழுச்சி பெற்றுள்ளது. குறிப்பாக தமிழ்நாடு துணை முதலமைச்சர் விளையாட்டுத் துறை அமைச்சராக பெறுப்பேற்ற நாளிலிருந்து விளையாட்டுத்துறை மிகவும் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து விளையாட்டுத்துறையில் இந்திய அளவில், ஆசிய அளவில், உலக அளவில், ஒலிம்பிக் அளவில் வெற்றி பெற்றவர்களை எடுத்து கொண்டால் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் முன்னிலையில் இருப்பார்கள். 

அந்த அளவிற்கு விளையாட்டுத் துறையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது. முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் ஆகியோர்களுக்கு தனித்தனியாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் விளையாட்டுப் போட்டிகளில் 6.7 இலட்சம் நபர்கள் விண்ணப்பித்துள்ளார்கள். மாவட்ட அளவில், மண்டல அளவில் நடைபெற்று முடிவற்று தற்போறு மாநில அளவில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

கடந்த வாரம் 3ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவியர்களுக்கான ஹாக்கி விளையாட்டுப் போட்டி தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று முடிவடைந்தது. அதில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.75,000/-, இரண்டாம் பரிசாக ரூ.50,000/-, மூன்றாம் பரிசாக ரூ.25,000/ம் வழங்கப்பட்டது. அதேப்போன்று இன்று கல்லூரி மாணவியர்களுக்கான மாநில அளவில் ஹாக்கி விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்போட்டி வருகின்ற 12 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.75,000/-, இரண்டாம் பரிசாக ரூ.50,000/-, மூன்றாம் பரிசாக ரூ.25,000/ம் வழங்கப்படவுள்ளது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் ரூ.2.40 கோடி மதிப்பில் ஹாக்கி மைதானத்தை மிகவும் சிறப்பாக ஏற்படுத்தி கொடுத்துள்ளார். 

மாணவியர்களிடம் ஹாக்கி மைதானத்தை பற்றி கேட்டப்போது மைதானம் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது என மாணவியர்கள் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் சிறப்பான ஹாக்கி மைதானம் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் அமைந்தது மிகவும் பெருமையாக கருதப்படுகிறது. இம்மைதானத்தை ஏற்படுத்தி கொடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முன்னதாக பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் ஹாக்கி விளையாட்டு போட்டியினை ஊக்கவிப்பதற்காக ஹாக்கி மட்டையுடன் மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் மரு.இரா.சுகுமார், தொடங்கி வைத்தார். இப்பேரணி பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் இருந்து அண்ணா விளையாட்டு அரங்கம் வரை சென்றடைந்தது. இப்பேரணியில் 1000த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பாஸ்கர், கனகராஜ், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் கிருஷ்ணசக்கரவர்த்தி, முக்கிய பிரமுகர் சித்திக், பரமசிவ ஜயப்பன் உட்பட அரசு அலுவலர்கள், விளையாட்டு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory