» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வீட்டில் அத்துமீறி நுழைந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை : வன ஊழியர் கைது!

ஞாயிறு 26, அக்டோபர் 2025 1:44:07 PM (IST)

மாஞ்சோலையில் வீட்டில் அத்துமீறி நுழைந்து தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வனத்துறை ஊழியர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியாக அம்பை அருகே உள்ள மாஞ்சோைல, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து பகுதிகள் திகழ்கிறது. இங்கு தனியார் தேயிலை தோட்ட நிறுவனம் குத்தகைக்கு எடுத்து தேயிலை உற்பத்தி செய்து வந்தது. இதில் மேற்கண்ட பகுதியை சேர்ந்தவர்கள் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். குத்தகை காலம் முடிவடைய உள்ளதால் கடந்த ஆண்டு அந்த நிறுவனம் தேயிலை உற்பத்தியை நிறுத்தியது.

இதனால் அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கான மறுவாழ்வு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும் இந்த பகுதியானது களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் தொழிலாளர்களை கீழே இறக்கவும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இருந்தாலும் அங்கு இன்னும் தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மாஞ்சோலையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அரங்கேறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த துரை மகன் அய்யாக்குட்டி (40). இவர் மாஞ்சோலையில் வனப்பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன் அய்யாக்குட்டி மதுபோதையில், திருமணமான 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் வீட்டிற்குள் அவரது கணவர் இல்லாத நேரத்தில் அத்துமீறி நுழைந்தார்.

கதவை பூட்டிக்கொண்டு அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இந்த சம்பவம் குறித்து மணிமுத்தாறு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வழக்குப்பதிந்து, அய்யாக்குட்டியை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

ஏற்கனவே கடந்த சிலநாட்களுக்கு முன் மாஞ்சோலையில் ரேஷன் பொருட்கள் வழங்க மறுக்கப்பட்ட நிலையில், தற்போது வனத்துறை ஊழியர், பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படும் அய்யாக்குட்டி, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் எவ்வாறு மது அருந்தினார். அவருக்கு எங்கிருந்து மதுபாட்டில் கிடைத்தது என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory