» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வங்கக்கடலில் மோந்தா புயல்: நெல்லை, தென்காசிக்கு பலத்த மழை எச்சரிக்கை!

திங்கள் 27, அக்டோபர் 2025 11:19:35 AM (IST)



வங்கக்கடலில் உருவானது மோந்தா புயல் காரணமாக தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

நேற்று இரவு 11:30 மணியளவில் (அக்.,26) 'மோந்தா' புயலாக உருமாறி வலுவடைந்தது. வங்கக் கடலில் புயல் உருவான நிலையில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து வலுப்பெற்று, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

இது, அந்தமான் தீவுகளின் போர்ட் பிளேயரில் இருந்து, மேற்கு, தென்மேற்கிலும், சென்னையில் இருந்து கிழக்கு, தென்கிழக்கில் 600 கி.மீ., தொலைவிலும், ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து, தென்கிழக்கு திசையிலும் நிலை கொண்டுள்ளது. மோந்தா புயல் மணிக்கு 16 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.

பின்னா், வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, ஆந்திர கடலோரப் பகுதிகளில், மசூலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினத்துக்கு இடையே காக்கிநாடா அருகில் தீவிர புயலாக செவ்வாய்க்கிழமை (அக். 28) கரையைக் கடக்கக்கூடும்.

அந்த நேரத்தில் காற்று 110 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். இதன் காரணமாக திங்கள்கிழமை (அக். 27) முதல் நவ. 2-ஆம் தேதி வரை வட தமிழகம் மற்றும் தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

‘ஆரஞ்சு’ எச்சரிக்கை: சென்னை, திருவள்ளூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (அக். 27) மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் பலத்த மழைக்கு வாய்ப்பிருப்பதால், இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை (அக். 28) திருவள்ளூா் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள், கன்னியாகுமரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் திங்கள்கிழமை இடி, மின்னலுடன் கூடிய மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள் மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக் கடலில் சூறைக் காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். இதனால், ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவா்கள் உடனடியாக கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்படுகிறாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory