» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நடுரோட்டில் கொதிக்கும் எண்ணெய்.. ஆக்கிரமிப்பு பிடியில் விளாத்திகுளம் சாலைகள்: கிராம மக்கள் அவதி!

புதன் 18, பிப்ரவரி 2026 3:22:22 PM (IST)



விளாத்திகுளத்தில் அதிகரித்து வரும் சாலை ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தான சூழல் நிலவி வருகிறது. இதனை நெடுஞ்சாலைத் துறையினர் கண்டுகொள்ளாமல் இருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் நகர் பகுதியில் வசிக்கும் சுமார் 10 ஆயிரம் மக்கள் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அன்றாடத் தேவை, மருத்துவம் மற்றும் கல்விக்காக தினமும் ஆயிரக்கணக்கில் விளாத்திகுளம் நகருக்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், நகரின் முக்கியப் பகுதிகளான மதுரை சாலை, எட்டையாபுரம் சாலை மற்றும் வேம்பார் சாலை ஆகியவற்றின் இருபுறமும் கடைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் அவசர காலங்களில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் கூடச் செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக மதுரை சாலையில் உள்ள ஒரு சிப்ஸ் கடையில், சாலையையே ஆக்கிரமித்து நடுரோட்டில் கொதிக்கும் எண்ணெயில் சிப்ஸ் பொரித்து வருகின்றனர். அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்வோரோ அல்லது நடந்து செல்வோரோ நிலைதடுமாறி விழுந்தால், கொதிக்கும் எண்ணெய் உடலில் சிந்தி உயிருக்கு ஆபத்து ஏற்படும் அச்சம் நிலவுகிறது.

அரசியல் அழுத்தம் காரணமா?

இதேபோல், பேருந்து நிலைய நுழைவு வாயிலின் இருபுறமும் பழக்கடைகள் ஆக்கிரமித்துள்ளதால், பேருந்துகள் உள்ளே சென்று வர முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் வாகனங்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ள நிலையில், ஆக்கிரமிப்புகளும் அதே அளவில் அதிகரித்துள்ளன. கடந்த 2013-ம் ஆண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுத்தபோது, ஒரு சில அரசியல்வாதிகளின் அழுத்தம் காரணமாக அந்தப் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பொதுமக்களின் கோரிக்கை

பள்ளி, கல்லூரி வாகனங்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர் உரிய நேரத்திற்குச் செல்ல முடியாமல் தினமும் தவித்து வருகின்றனர். எனவே, தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், சாலையின் இருபுறமும் நடைமேடை அமைத்துத் தர வேண்டும், விதிமீறிச் செயல்படும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விளாத்திகுளம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory