» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் வேரோடு சாய்ந்த மரம்: துணை மின் நிலையம், வாகனங்கள் பலத்த சேதம்!

புதன் 27, மே 2026 5:36:02 PM (IST)



தூத்துக்குடி மாநகரப் பகுதியில் இன்று பிற்பகல் வீசிய பயங்கரச் சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழையின் காரணமாகப் பிரதான வீதியில் இருந்த பழமையான மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்ததில், மின் மாற்றி நிலையம், மின்கம்பங்கள் மற்றும் பொதுமக்கள் நிறுத்தியிருந்த வாகனங்கள் பலத்த சேதமடைந்தன.

தூத்துக்குடியில் இன்று பிற்பகல் 3:00 மணியளவில் இருந்து இடி மின்னலுடன் கூடிய பலத்த கோடை மழை கொட்டித் தீர்த்தது. இந்த மழையின் போது வீசிய பலத்த காற்றின் காரணமாகத் தூத்துக்குடி சிவன் கோயில் அடுத்துள்ள பெருமாள் கோயில் தெருவில் இருந்த சுமார் 50 ஆண்டுகள் பழமைவாய்ந்த பெரிய வாகை மரம் திடீரென வேரோடு பெயர்ந்து தெருவின் நடுவே சாய்ந்தது.

மரம் சாய்ந்த பகுதியில் மிக அருகிலேயே மின் துணை நிலையம் அமைந்துள்ளது. மரம் நேராக அந்த மின் நிலையத்தின் மீதும், அதன் பிரதான மின் கம்பிகள் மீதும் பயங்கரமாக விழுந்ததால் மின் கம்பிகள் அனைத்தும் அறுந்து விழுந்து பலத்த சேதமடைந்தன. மேலும், இந்த அதிர்வினால் அதற்கு எதிர்புறத்தில் நின்றிருந்த மற்றொரு மின் கம்பமும் உடைந்து சரிந்தது.

மரம் விழுந்த வேளையில், அதன் கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொதுமக்களின் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இரண்டு சைக்கிள்கள் ஆகியவை மரத்தின் இடுக்கில் சிக்கி முழுமையாக நசுங்கி உருக்குலைந்தன. மரம் விழும் சத்தம் கேட்டுப் பொதுமக்கள் அலறியடித்து ஓடியதால் நல்வாய்ப்பாகப் பெரும் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இவ்விபத்து குறித்துத் தகவல் அறிந்தவுடன் தூத்துக்குடி சண்முகபுரம் உதவி மின் பொறியாளர் ராபர்ட் தலைமையில், 20-க்கும் மேற்பட்ட மின் வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்குப் போர்க்கால அடிப்படையில் விரைந்து வந்தனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, அப்பகுதிக்கான மின் இணைப்புகள் உடனடியாகத் துண்டிக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, நடுரோட்டில் விழுந்து போக்குவரத்தை முடக்கியிருந்த மரத்தைக் கிரேன் எந்திரம் மற்றும் நவீனக் ரம்பங்கள் மூலம் வெட்டி அப்புறப்படுத்தும் பணிகள் தொடங்கின. மின் ஊழியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஒன்றிணைந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி மரத்தை முழுமையாக வெட்டி அகற்றினர்.

மரம் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிப் புதிய மின்கம்பம் நடும் பணிகளும், அறுந்து கிடந்த மின் கம்பிகளை மீண்டும் இணைக்கும் பணிகளும் அதிவேகமாக நடைபெற்றன. அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து மாலை 5:30 மணியளவில் மின் விநியோகம் வழங்கப்பட்டது. 

இந்த விபத்தின் காரணமாகச் சிவன் கோயில் மற்றும் பெருமாள் கோயில் தெரு பிரதான சாலைகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.


மக்கள் கருத்து

இயற்கை ஆர்வலர்மே 27, 2026 - 06:30:54 PM | Posted IP 172.7*****

சாலைகளில் எல்லா இடத்தில இருக்கும் மரத்தை கவனிக்கமாட்டார்கள், அப்படியே விட்டு விடுவார்கள் மாநகராட்சி துட்டு பயலுக. இப்போ விறகுகளை வெட்டி துட்டுக்காக எங்கேயோ விற்று விடுவார்கள். எல்லா சாலைகளை இருக்கும் மரத்தை கவனிங்கடா.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory