» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நீட் தேர்வில் வெற்றி: ஒரே நேரத்தில் மருத்துவப் படிப்புக்கு தேர்வான நெசவுத்தொழிலாளியின் 3 மகன்கள்!

புதன் 19, ஆகஸ்ட் 2026 8:42:51 AM (IST)

NeetNellai.jpg

நெசவுத்தொழிலாளியின் 3 மகன்கள் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்று அசத்தினர். அவர்களுக்கு ஒரே நேரத்தில் மருத்துவ கல்லூரியில் படிக்க இடம் கிடைத்து உள்ளது.

நெல்லை மாவட்டம் வெள்ளாங்குழியைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 49). இவரது மனைவி மங்கையர் திலகம் (46). இவர்கள் நெசவுத்தொழில் செய்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு வெங்கட்ஸ்ரீ (22), அருண் (18), தரண் (18) இரட்டைச் சகோதரர்கள் என 3 மகன்கள் உள்ளனர். தொழிலில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்தி வரும் நிலையில், பொருளாதார சிரமங்களுக்கு மத்தியிலும் 3 மகன்களையும் வெள்ளாங்குழியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்க வைத்து, மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவை பெற்றோர் ஊக்கப்படுத்தி வந்தனர்.

அதன்படி மூத்த மகன் வெங்கட்ஸ்ரீ கடந்த 2022-23-ம் ஆண்டு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று ‘நீட்’ தேர்வு எழுதி, 300 மதிப்பெண்கள் பெற்றார். மருத்துவ இடம் கிடைக்காததால் மனமுடையாமல் கடந்த ஆண்டு மீண்டும் ‘நீட்’ தேர்வு எழுதி 420 மதிப்பெண்கள் பெற்றார். அப்போதும் எதிர்பார்த்த இடம் கிடைக்காத நிலையில், இந்த ஆண்டு விடாமுயற்சியுடன் ‘நீட்’ தேர்வை எழுதி 440 மதிப்பெண்கள் பெற்றார்.

இதற்கிடையே வெங்கட்ஸ்ரீயின் இரட்டை சகோதரர்களான அருண், தரண் ஆகியோரும் இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வை எழுதினர். இதில் முறையே 511, 494 மதிப்பெண்கள் பெற்றனர். இதையடுத்து சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற கலந்தாய்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ், 3 பேருக்கும் மருத்துவ கல்லூரிகளில் படிக்க இடம் கிடைத்துள்ளது.

அதன்படி வெங்கட்ஸ்ரீக்கு நாகர்கோவில் பல் மருத்துவ கல்லூரியிலும், அருணுக்கு நெல்லை அரசு மருத்துவ கல்லூரியிலும், தரணுக்கு கோவை பி.எஸ்.ஜி. மருத்துவ கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது. நெசவுத்தொழிலில் கிடைக்கும் குறைந்த வருமானத்திலும் மகன்களின் கல்விக்காக பெற்றோர் மேற்கொண்ட முயற்சிக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. ஒரே குடும்பத்தில் 3 சகோதரர்களும் அரசு பள்ளியில் படித்து ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்று, மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்து இருப்பது வெள்ளாங்குழி பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

நெசவாளரின் வீட்டில் ஒருவரின் மருத்துவக் கனவு அல்ல, 3 மகன்களின் மருத்துவக் கனவும் நனவாகியிருப்பது பெருமையாக இருப்பதாக பெற்றோர் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாணவர்களின் தந்தை ராம்குமார் கூறியதாவது: வெங்கட்ஸ்ரீ 3 ஆண்டுகள் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி செய்து இந்த முறை வெற்றி பெற்றுள்ளார். அதுபோல் 2025-ம் ஆண்டு 12-ம் வகுப்பு தேர்வில் தரண் (582 மதிப்பெண்), அருண் (557 மதிப்பெண்) எடுத்தனர்.

அதைத்தொடர்ந்து ஓராண்டு சேலத்தில் உள்ள தனியார் ‘நீட்’ பயிற்சி மையத்தில் பயின்று தற்போது வெற்றி பெற்றுள்ளனர். தமிழக அரசின் 7.5 சதவீத இடஒதுக்கீடு மூலம் மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைத்துள்ளது. இதற்கு உதவிய பள்ளி ஆசிரியர்கள், அரசுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எனது மகன்கள் திருமணம், கோவில் விழாக்கள் போன்ற எந்த விசேஷங்களிலும் கலந்து கொள்ளாமல் படிப்பை மட்டுமே முக்கியத்துவமாக கருதி பயின்று வெற்றி பெற்றுள்ளனர்.

எனது மகன்களின் தாய்மாமா பாபு கடந்த 2022-ம் ஆண்டு புற்று நோயால் உயிரிழந்தார். இது எனது மகன்களுக்கு ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் மருத்துவம் படிக்க வேண்டும். நாமும் மருத்துவராக வேண்டும் என்ற முனைப்போடு 3 மகன்களும் படித்து வெற்றி பெற்று உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory