» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஆன்லைன் ஆவணப்பதிவில் உள்ள குறைபாடுகளைக் களைய எம்பவர் இந்தியா வலியுறுத்தல்!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 8:50:50 PM (IST)
சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் வராமலே ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படும் ஆவணப்பதிவு நடைமுறையில் உள்ள பல்வேறு குறைபாடுகளைக் களைய வேண்டும் என 'எம்பவர் இந்தியா' அமைப்பின் செயல் இயக்குநர் ஆ.சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் தாங்களாகவே ஆன்லைன் மூலம் ஆவணங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். இதற்காக சார்பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் வரத் தேவையில்லை, காத்திருக்கத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அலுவலகம் வரத் தேவையில்லாத ஆவணப் பதிவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த நடைமுறையில் ஏராளமான குறைபாடுகள் ஏற்படுவதாக தெரிகிறது.
முதலாவதாக, அலுவலகத்துக்கு நேரில் வந்து செய்யப்படும் பதிவுக்கும், அலுவலகத்துக்கு வராமல் ஆன்லைன் மூலம் செய்யப்படும் பதிவுக்கும் ஒரே தகவல் தொடர்பு வழித்தடமே பயன்படுத்தப்படுகிறது. இதில் ஒரே நேரத்தில் ஒரு வழித்தடத்தை மட்டுமே பயன்படுத்த முடியும். எனவே, அலுவலகப் பதிவை நிறுத்திவிட்டு ஆன்லைன் பதிவை அனுமதித்தால், அலுவலகத்தில் நடைபெறும் பதிவு முழுமையாகத் தடைபடுகிறது. அதேபோல், அலுவலகப் பதிவை தொடர்ந்து நடத்தி, ஆன்லைன் பதிவை நிறுத்தினால் ஆன்லைன் பதிவுகள் அனைத்தும் தடைபடுகின்றன.
இரண்டாவதாக, மனைப்பிரிவுகளில் நடைபெறும் முதல் விற்பனை ஆவணங்கள் அலுவலகத்துக்கு வராமல் ஆன்லைன் முறையிலேயே பதிவு செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக ஆவணங்களைத் தயாரிக்கும்போது, பதிவுக்கு பிறகு அசல் ஆவணம் வாங்குபவரிடம் ஒப்படைக்கப்படும் என்ற வாசகம் ஏற்கனவே உள்ள தரவுகளின் அடிப்படையில் தானாகவே இடம்பெறுகிறது. பொதுவாக மனைப்பிரிவு அமைத்து மனைகளை விற்பனை செய்பவர்களால் அசல் தாய் ஆவணத்தை ஒவ்வொரு வாங்குபவரிடமும் ஒப்படைக்க முடியாது. ஏனெனில் ஒரே மனைப்பிரிவில் பலர் மனைகளை வாங்குவார்கள். ஆனால், அந்த மனைப்பிரிவுக்கு ஒரு அசல் தாய் ஆவணம் மட்டுமே இருக்கும். எனவே, அந்த அசல் ஆவணத்தை யாரிடம் ஒப்படைப்பது என்ற சிக்கல் ஏற்படுகிறது.
இதனால், மனைப்பிரிவு ஆவணங்களிலும், அடுக்குமாடி குடியிருப்புகளில் பிரிக்கப்படாத பங்கு விற்பனை செய்யப்படும் ஆவணங்களிலும் பொதுவாக தாய் ஆவணம் ஒப்படைக்கப்படுவதில்லை. ஆனால், தற்போதைய ஆன்லைன் பதிவில் தாய் ஆவணம் ஒப்படைக்கப்படும் என்று வாசகம் இடம்பெறுகிறது. அந்த வாசகத்தை ஆவணத்தில் கையால் மாற்றுவதற்கும் வழியில்லை. இதனால் பெரும் குழப்பம் ஏற்படுகிறது.
மூன்றாவதாக, வங்கிகளில் ஆவணங்களை அடமானம் வைத்து கடன் பெறுவதற்காக பதிவு செய்யப்படும் ஆவணங்கள், வங்கி வைப்பீடு அல்லது எம்.ஓ.டி. என்று அழைக்கப்படுகின்றன. இதுபோன்ற ஆவணங்களைப் பதிவு செய்ய வரும்போது, பல வங்கிகளின் பெயர்கள் ஆன்லைன் பட்டியலில் இடம்பெறவில்லை. பட்டியலில் இடம்பெற்றுள்ள வங்கிகளைத் தவிர மற்ற வங்கிகளில் அடமான ஆவணத்தைப் பதிவு செய்ய முயன்றால், அதை பத்திரப்பதிவுத்துறை இணையதளம் ஏற்றுக்கொள்ளவதில்லை. பொதுவாக இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மற்றவை என்ற பிரிவில் வங்கியின் பெயரைப் பதிவு செய்து கொள்ளும் வசதி இருக்கும். ஆனால், தற்போது அந்த வசதி இல்லை. எனவே, மற்றவை என்ற தேர்வை வழங்குவது கட்டாயமாகும்.
நான்காவதாக, போதிய பயிற்சியும் அனுபவமும் இல்லாததால், அலுவலகத்துக்கு வராமல் செய்யப்படும் ஆவணப் பதிவுகளுக்கான விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்யும்போது பல்வேறு தவறுகள் ஏற்படுகின்றன. எனவே, இதுபோன்ற தவறுகளைத் திருத்துவதற்கும், தேவையான மாற்றங்களைச் செய்வதற்கும் பதிவு அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளுக்கு உரிய அதிகாரம் வழங்கப்பட வேண்டும். இந்த குறைபாடுகள் போர்க்கால அடிப்படையில் சரிசெய்து, அலுவலகத்துக்கு வராமல் செய்யப்படும் ஆவணப் பதிவு நடைமுறை வெற்றிகரமாக நடைபெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எம்பவர் இந்தியா செயல் இயக்குநர் ஆ.சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்களுக்கான த.வெ.க. ஆட்சியில் ஊழலுக்கு இடமில்லை : நெல்லையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:51:53 AM (IST)

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
சனி 22, ஆகஸ்ட் 2026 12:33:41 PM (IST)

காவல் நிலையத்தில் வாலிபர் தற்கொலை முயற்சி : தலைமை காவலர் உள்பட 2பேர் சஸ்பெண்ட்!
சனி 22, ஆகஸ்ட் 2026 11:31:58 AM (IST)

திருநெல்வேலியில் செப். 19-ல் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்!
சனி 22, ஆகஸ்ட் 2026 11:09:15 AM (IST)

ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: வழக்கறிஞர் அதிரடி கைது!
சனி 22, ஆகஸ்ட் 2026 8:55:08 AM (IST)

நெல்லையில் குரூப் 2 தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 24ஆம் தேதி தொடங்குகிறது!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 10:44:13 AM (IST)



BabuAug 24, 2026 - 07:38:30 AM | Posted IP 104.2*****