» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!: போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

வியாழன் 20, ஆகஸ்ட் 2026 12:53:39 PM (IST)

NellaiFAther.jpg

4 சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், மதபோதகருக்கு மரண தண்டனை விதித்து நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் ஆபிரகாம் (53). மதபோதகரான இவர் அப்பகுதியில் ஊழியம் செய்து வந்ததுடன், பல்வேறு மாவட்டங்களுக்குப் பெண்கள் மற்றும் குழந்தைகளை அழைத்துச் சென்று ஊழியம் செய்து வந்துள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு, ஊழியம் செய்வதற்காக அழைத்துச் செல்லப்பட்ட 12, 13 மற்றும் 8 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுமிகள் உட்பட மொத்தம் 4 சிறுமிகளுக்கு ஆபிரகாம் பாலியல் தொல்லை கொடுத்து வன்கொடுமை செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமிகள் கூறிய தகவலின் அடிப்படையில், பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நெல்லை மாவட்ட ஊரக உட்கோட்ட மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின்படி, மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சண்முகம் தலைமையில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அனைத்துச் சாட்சிகளும் நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவ்வழக்கின் இறுதி விசாரணை நிறைவடைந்த நிலையில், குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பளித்தார். அதில்,  குற்றம் சாட்டப்பட்ட மதபோதகர் ஆபிரகாமுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளுக்கும் தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிடப்பட்டது. 

நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில், போக்சோ வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு இதுவரை 4 பேருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory