» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆவணங்களை திருடி சென்றனர்; லஞ்ச ஒழிப்பு போலீசார் மீது அமலாக்க துறை புகார்

திங்கள் 4, டிசம்பர் 2023 11:49:52 AM (IST)

லஞ்ச ஒழிப்பு  போலீசார் அத்துமீறி நுழைந்து ஆவணங்களை திருடிச் சென்றனர் என  அமலாக்க துறை புகார் அளித்துள்ளது.

'மதுரை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து ஆவணங்களை எடுத்துச் சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., சத்தியசீலன் உட்பட 35 பேர் மீது, ஆவணங்களை திருடியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்' என, டி.ஜி.பி., சங்கர் ஜிவாலுக்கு அமலாக்கத்துறை உதவி இயக்குனர் பிரிஜேஷ் பெனிவால் கடிதம் அனுப்பியுள்ளார்.

திண்டுக்கல் அரசு டாக்டர் சுரேஷ்பாபுவிடம் லஞ்சம் பெற்றதாக டிச., 1ல் மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.மதுரை தபால் தந்தி நகரில் உள்ள மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தில் 13 மணி நேரம் போலீசார் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.

இதுதொடர்பாக டி.ஜி.பி., சங்கர் ஜிவாலுக்கு மண்டல அமலாக்கத்துறை உதவி இயக்குனர் பிரிஜேஷ் பெனிவால் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் தெரிவித்துள்ளதாவது:டிச., 1 மதியம் 1:15 மணிக்கு சந்தேகத்திற்கிடமான இருவர் 'உளவு அதிகாரிகள்' எனக்கூறி வந்தனர். அடையாள அட்டை, வந்த நோக்கம் குறித்து கேட்டபோது நழுவினர்.

ஒருமணி நேரம் கழித்து 2:30 மணிக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் உட்பட 35 பேர் அத்துமீறி அலுவலகத்திற்குள் புகுந்தனர். டி.எஸ்.பி., சத்தியசீலன் மட்டுமே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். சோதனை தொடர்பாக எந்த உத்தரவையும் எங்களுக்கு காட்டவில்லை. எப்.ஐ.ஆர்., நகல், வாரன்ட் போன்றவற்றை கேட்டதற்கு எதுவும் தரவில்லை.

அமலாக்க அதிகாரி அங்கித் திவாரியின் பூட்டிய அறைக்குள் அத்துமீறி நுழைந்து, ஆவணங்களை ஆய்வு செய்தல் என்ற பெயரில் அலுவலகம் முழுதும் சூறையாடினர்.சோதனை செய்ய தங்களுக்கு உயர் அதிகாரிகள் அழுத்தம் கொடுத்ததாக கூறி வந்தனர்.

டி.எஸ்.பி., சத்தியசீலன், இன்ஸ்பெக்டர்கள் சூரியகலா, ரமேஷ்பாபு, குமரகுரு, கூளப்பாண்டி வருவாய் ஆய்வாளர் வெற்றிவேலன், திருப்பாலை வி.ஏ.ஓ., முத்துகிருஷ்ணன் உட்பட 35 பேர் சோதனை செய்ததை வீடியோவாக பதிவு செய்துள்ளோம்.

மாநிலத்தின் சில சக்தி வாய்ந்த நபர்கள் குறித்து, அமலாக்கத்துறை விசாரித்து அதுகுறித்த ஆவணங்களை பராமரித்து வரும் நிலையில், அத்துமீறி சோதனை நடத்தியுள்ளனர். இச்சோதனை சட்ட விரோதம்.

எனவே, லஞ்ச ஒழிப்பு போலீசார் உட்பட 35 பேர் மீது அத்துமீறி நுழைந்து சோதனையிட்டது, மிரட்டியது, முக்கிய ஆவணங்களை திருடிச்சென்றது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். புகார் குறித்து நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், நீதிமன்றத்தை அணுக அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory