» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வெள்ளம் பாதித்த குடும்பங்களுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு: ஓபிஎஸ் வலியுறுத்தல்!
செவ்வாய் 5, டிசம்பர் 2023 10:17:06 AM (IST)
கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் "கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக சென்னை மாநகரம் முழுவதும் தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கிறது. பெரும்பாலான சாலைகளில் தண்ணீர் ஆறு போல ஓடுகிறது.
இதையொட்டி சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெள்ளத் தடுப்புப் பணிகளை பார்வையிட முதல்வர் வேண்டுகோள் விடுத்ததாக செய்திகள் வந்தன. ஆனால் யாரும் களத்துக்கு சென்று பார்த்தாக தெரியவில்லை. சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எல்லாம் நன்றாக இருப்பதாகவே பேட்டியளித்து வருகிறார். ஆனால் களநிலவரம் வேறுவிதமாக உள்ளது. வெள்ளப்பெருக்கு தொடர்பாக எதிர்க்கட்சியாக இருந்தபோது காட்டிய ஆர்வத்தை முதல்வர் தற்போது காட்ட தயங்குவது ஏன்?
மழைநீர் வடிகால் மற்றும் வெள்ளத் தடுப்பு பணிகள் ரூ.4ஆயிரம் கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டும் சென்னை மாநகர் மழைநீரில் மூழ்குகிறது என்றால், சரியான திட்டமிடல் இல்லைஎன்றே எண்ணத் தோன்றுகிறது. இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு நடத்த வேண்டும்.
மேலும் மக்களுக்கு தேவையான மீட்பு, நிவாரணம் மற்றும்மறுவாழ்வு பணிகளை மேற்கொள்ள, போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதுடன், தண்ணீரில் மூழ்கிய சாலைகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் இழப்பீடாகவும் வழங்க வேண்டும்.