» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் 4பேருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!

புதன் 14, பிப்ரவரி 2024 5:13:00 PM (IST)

ஸ்ரீவைகுண்டம் அருகே அ.தி.மு.க., பிரமுகர் பிச்சையா கொலை வழக்கில் 4பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்தது. 

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே கொங்கராயகுறிச்சியைச் சேர்ந்தவர் சாம் தேவசகாயம். ஓய்வுபெற்ற ஆசிரியரான இவரை கடந்த 15.7.2014 அன்று மர்மகும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் கடந்த 22.7.2014 அன்று இறந்தார்.

இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக, கொங்கராயகுறிச்சியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர், விவசாயி பிச்சையா (55) என்பவர் செயல்பட்டதாக, சாம் தேவசகாயத்தின் ஆதரவாளர்கள் கருதினர். எனவே, அவரை பழிக்குப்பழியாக கொலை செய்ய திட்டம் தீட்டினர்.

கடந்த 10.3.2015 அன்று பிச்சையா தன்னுடைய மகன்கள் பாலசுப்பிரமணியன், வீரபாண்டியன் ஆகியோருடன் தோட்டத்துக்கு சென்று கொண்டிருந்தார். அவர்கள் மூர்த்திநகர் பகுதியில் சென்றபோது, பிச்சையாவின் செல்போனுக்கு அழைப்பு வந்தது.

இதனால் பிச்சையா, மூர்த்திநகர் தெருவுக்குள் சென்றார். அப்போது அங்கு மறைந்து இருந்த மர்மகும்பல் திடீரென்று பிச்சையாவை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது. இதனை தடுக்க முயன்ற பாலசுப்பிரமணியன், வீரபாண்டியன் ஆகியோருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொங்கராயகுறிச்சியைச் சேர்ந்த அருளப்பன் மகன் அந்தோணிராஜ் என்ற அந்தோணி (40), தங்கராஜ் மகன் ராபின் (28), ராமசுப்பு மகன் ரவி (49), அன்பு பட்டுராஜ் என்ற பட்டுராஜ் (32), சுப்புராஜ் (46), ஜெகன் ராபர்ட் (34), விஜய் (31), முத்துப்பாண்டி (36), பார்த்திபன், செல்லப்பா (53), பிச்சாண்டி (56), செல்வராஜ் (29) மற்றும் 2 சிறுவர்கள் உள்பட 14 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் சம்பந்தப்பட்ட 2 சிறுவர்களுக்கான வழக்கு தனியாக நடைபெறுகிறது. வழக்கு விசாரணை காலத்தில் பார்த்திபன் இறந்ததால், மீதமுள்ள 11 பேர் மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம், குற்றம் சாட்டப்பட்ட அந்தோணிராஜ் என்ற அந்தோணி, ராபின், ரவி, அன்பு பட்டுராஜ் என்ற பட்டுராஜ் ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மற்ற 7 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மோகன்தாஸ் சாமுவேல் ஆஜரானார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory