» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மயக்க ஊசி செலுத்தி உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண் டாக்டர்..!!

வியாழன் 28, மார்ச் 2024 11:55:56 AM (IST)

திருவனந்தபுரத்தில் அரசு மருத்துவமனையில் இளம் பெண் டாக்டர் மயக்க ஊசி செலுத்தி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வெள்ளநாடு பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் நாயர். இவருடைய மகள் அபிராமிக்கு 30 வயது ஆகிறது. இவர் முதுநிலை டாக்டர் பட்டம் பெற்றவர் ஆவார். டாக்டர் அபிராமி திருவனந்தபுரம் அரசு பொது மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தார்.

கொல்லம்ராமன் குளங்கரையை சேர்ந்த டாக்டர் பிரதீஷ் ரகு என்பவருக்கும், டாக்டர் அபிராமிக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பெற்றோர்கள் நிச்சயப்படி திருமணம் நடந்தது. பிரதீஷ் ரகு மும்பையில் டாக்டராக வேலை செய்து வருகிறார். டாக்டர் அபிராமி திருமணத்துக்கு பின்பு திருவனந்தபுரம் பி.டி.சாக்கோ நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தபடி அரசு மருத்துவமனைக்கு தினமும் சென்று வந்தார்.

இந்தநிலையில் கடந்த மார்ச் 26ம் தேதி மதியம் பணியில் இருந்த அபிராமி அறைக்கு சாப்பிட சென்றுள்ளார். பின்னர் அவர் அறையில் இருந்து வெளியே வரவில்லை. அவர் பணிக்கு வராததால் அவருடன் பணிபுரிந்து வந்த சக டாக்டர்கள் அவரது அறைக்கு வந்து கதவை தட்டியுள்ளார்கள் ஆனால் உள்ளிருந்து எந்த சத்தமும் வரவில்லை. இதனால் அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு அபிராமி படுக்கையில் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள்.

உடனே டாக்டர் அபிராமியை மீட்டு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அபிராமி ஏற்கனவே இறந்து விட்டதை கண்டனர். இதுகுறித்து போலீசாருக்கு உடனடியாக டாக்டர்கள் தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து அபிராமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

தொடர்ந்து அபிராமி தங்கியிருந்த அறையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவரது அறையில் பயன்படுத்தப்பட்ட ஊசி கிடந்தது. விசாரணையில் அவர் அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தும் மயக்க மருந்தை அளவுக்கு அதிகமாக ஊசி மூலம் உடலில் செலுத்தி உயிரை மாய்த்து கொண்டதை கண்டுபிடித்தனர்.

மேலும் அபிராமி எழுதிய கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினார்கள். அதில், 'எனது மரணத்துக்கு யாரும் காரணம் இல்லை. வாழ விரும்பவில்லை. போகிறேன்' என எழுதி இருந்ததாக கூறப்படுகிறது.. அபிராமி தினமும் மாலை 3 மணிக்கு பெற்றோரிடம் செல்போனில் பேசுவாராம். அதன்படி கடந்த மார்ச் 26ம் தேதி அன்று பிற்பகல் 3 மணி அளவில் பெற்றோரிடம் பேசியிருக்கிறார். அப்போது சகஜமாக தங்களிடம் மகள் பேசியதாகவும் அதற்கு பின்பு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றும் அபிராமியின் பெற்றோர் கண்ணீர் மல்க போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதற்கிடையே பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடல் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண் டாக்டரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவத்தால் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory