» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாகர்கோவில் - ஷாலிமார் ரயிலை தாம்பரம் வரை நீட்டித்து ஒரே எண்ணில் இயக்க கோரிக்கை

சனி 10, மே 2025 10:44:08 AM (IST)

நாகர்கோவில் - ஷாலிமார் ரயிலை தாம்பரம் வரை நீட்டித்து ஒரே எண் கொண்ட ரயிலாக தாம்பரம் - ஷாலிமார் என்று இயக்க வேண்டும் என குமரி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
 
தென்மாவட்டங்களில் இருந்து தங்கள் மாநிலத்தின் தலைநகர் சென்னைக்கு அலுவல் பணிகள், உயர்கல்வி, வேலைவாய்ப்பு என்று பல்வேறு பணிகள் நிமித்தம் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் சென்று வருகின்றனர். இவ்வாறு செல்லும் மக்களுக்கு தற்போது சென்னைக்கு இயக்கப்பட்டு வரும் ரயில்கள் யானை பசிக்கு சோளப்பொறி போல் தான் உள்ளது. அனைத்து மாவட்ட மக்களும் தங்கள் மாவட்ட தலைநகரத்திலிருந்து மாநில தலைநகர் சென்னைக்கு இரண்டாவது தனி தினசரி ரயில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

ரயில்வேதுறை ஏதாவது ஒரு ஊருக்கு ஒரு ரயிலை இயக்க விட்டு ஒட்டுமொத்த தென்மாவட்ட மக்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள் என்று கூறினால் அனைத்து தென்மாவட்ட மக்கள் மாறி மாறி ஒரே ரயிலுக்கு அடிதான் பிடிப்பார்கள். இதற்கு பல கோடிகள் செலவு செய்து சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள இருப்பு பாதை இருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்ட பிறகு இந்த தடத்தில் புதிய ரயில்கள் இயக்க ரயில்வேதுறை தயாராக இல்லை. 

அதிலும் குறிப்பாக சென்னையிலிருந்து புறப்படும் நெடுந்தூர ரயில்களை தென்மாவட்டங்களுக்கு நீட்டிப்பு செய்து இயக்க தெற்கு ரயில்வே தயாராக இல்லை. இந்த நிலையில் நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலியிருந்து புறப்படும் ரயிலையாவது முழுவதும் இருவழி பாதை பணிகள் முடிந்த தாம்பரம் வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்று தென்மாவட்ட பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர். 

தென்மாவட்ட பயணிகள் நிலைமை இவ்வாறு பரிதாபமாக இருக்கும் நிலையில் ரயில்வே துறையின் செயல்பாடு மிகவும் பரிதாபகரமான முகம் சுழிக்கும் வகையில் கேரளா பயணிகளுக்கு ஆதரவாக கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மக்கள் பாதிக்கும் வகையில் உள்ளடி வேலைகளில் ஈடுபட்டு வருகிறது என்பதை பார்க்கும் போது மனம் வெதும்புகிறது.
 
கடந்த ஆண்டு கன்னியாகுமரியிலிருந்து கேரளா அதாவது திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், பாலக்காடு, கோயம்புத்தூர், சேலம் வழியாக அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள திப்ருகர் என்ற ஊருக்கு கன்னியாகுமரி மதுரை- சென்னை இருவழி பாதை பணிகள் முடிந்த பிறகு இந்த பாதையில் ரயிலை இயக்காமல் கேரளா வழியாக சுற்றுப்பாதையில் தினசரி ரயிலை அறிவித்து இயக்கி வருகிறது. 

தற்போது திருநெல்வேலி -பிலாஸ்பூர் தினசரி ரயிலாக இயக்கும் பணிகள் ரயில்வேதுறை மறைமுகமாக செய்து வருகிறது. இது முடிந்த பிறகு அவர்கள் பட்டியலில் நாகர்கோவில் - ஷாலிமார் வாராந்திர ரயிலை தினசரி ரயிலாக மாற்றம் செய்து இயக்குவார்கள். இது போன்ற திட்டங்களை ஆரம்பத்திலே மக்கள் பிரதிநிதிகள் குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். குமரி மாவட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் ரயில்வே அதிகாரிகளுக்கு ஆமாம் சாமி போடுகிறார்கள்.

அதற்கு இடம் கொடுக்காமல் இருக்க இந்த இரண்டு வாராந்திர ரயில்களையும் திருநெல்வேலி, மதுரை, திருச்சி வழியாக தாம்பரம் வரை நீட்டிப்பு செய்து தாம்பரம் -ஷாலிமார் மற்றும் தாம்பரம் - பிலாஸ்பூர் என்ற ஒரே எண் கொண்ட ரயிலாக இயக்க வேண்டும் கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் சங்கம் கோரிக்கை விடுக்கின்றது. இவ்வாறு இயக்கும் போது சென்னைக்கு இரண்டு வாராந்திர ரயில்கள் சேவை கிடைக்கும். இது தென்மாவட்ட பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

நாகர்கோவில் - ஷாலிமார் ரயில் நாகர்கோவிலிருந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மதியம் 2:45 மணிக்கு நாகர்கோவிலிருந்து புறப்பட்டு ஷாலிமார் சென்றுவிட்டு அதே ரயில் பெட்டிகள் வெள்ளிக்கிழமை 21:40 மணிக்கு வந்து சேர்கிறது. பின்னர் வெள்ளிக்கிழமை 21:40 முதல் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2:45 வரை நாகர்கோவிலில் பராமரிப்பு பணிகள் உட்பட காலியாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். 

ஷாலிமாரிலிருந்து நாகர்கோவில் வரும் ரயிலை அப்படியே நாகர்கோவில் டவுன் வழியாக வெள்ளிக்கிழமை இரவு 21:40 மணிக்கு தாம்பரத்துக்கு புறப்பட்டு செல்லுமாறு இயக்கினால் சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு சென்னை தாம்பரம் சென்று சேரும். பின்னர் இந்த ரயில் பெட்டிகள் தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் முடித்துவிட்டு சனிக்கிழமை இரவு 23:30 மணிக்கு புறப்பட்டு திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாக ஞாயிற்றுக்கிழமை மதியம் 2:45 மணிக்கு வந்துசெருமாறு இயக்கி அப்படியே நாகர்கோவில் டவுன் வழியாக பழைய கால அட்டவணையில் கேரளா வழியாக ஷாலிமார் செல்லுமாறு இயக்கப்படும்.

இதைப்போல் திருநெல்வேலி -பிலாஸ்பூர் ரயில் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்திற்கு வியாழக்கிழமை நடுஇரவு 1:00 மணிக்கு வந்து திருநெல்வேலிக்கு வியாழக்கிழமை அதிகாலை 03:00 மணிக்கு வந்து சேர்கிறது. இந்த ரயிலை அப்படியே தாம்பரம் வரை நீட்டிப்பு செய்தால் வியாழக்கிழமை மதியம் 2:00 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். இவ்வாறு தாம்பரம் சென்ற ரயில் பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு ஒவ்வொரு சனிக்கிழமை மதியம் 12:00 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு திருநெல்வேலிக்கு ஞாயிற்றுக்கிழமையும் நடுஇரவு 1:25 மணிக்கு, நாகர்கோவிலுக்கு நடுஇரவு 2:41 மணிக்கு வந்து திருவனந்தபுரம் வழியாக சுற்றுப்பாதையில் பிலாஸ்பூர் க்கு செல்லும்

இதுவரை நாகர்கோவிலிருந்து கேரளா வழியாக சுற்றுப்பாதையில் இயங்கிவந்த ரயில் இனி தாம்பரத்தில் இருந்து திருச்சி, மதுரை திருநெல்வேலி , திருவனந்தபுரம் வழியாக சுற்று பாதையில் இயங்கும்.

சென்னை - ஷாலிமர் ரயில் கன்னியாகுமரி வரை நீட்டிப்பு: தற்போது சென்னை முதல் கன்னியாகுமரி வரை இருவழி பாதை பணிகள் முடிந்து விட்டன. சென்னை சென்ட்ரல் - ஷாலிமார் வாராந்திர ரயிலை, விழுப்புரம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கடந்த சில ஆண்டுகளாக வைக்கப்பட்டு வருகிறது.

சென்னை சென்ட்ரல் - பிலாஸ்பூர் ரயில் கன்னியாகுமரி வரை நீட்டிப்பு: இந்த நிலையில் சென்னையிலிருந்து பிலாஸ்பூர் இயக்கப்பட்டு வரும் வாராந்திர ரயிலை தாம்பரம், விழுப்புரம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கடந்த சில ஆண்டுகளாக வைக்கப்பட்டு வருகிறது. 

நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலி ரயில்வே டிப்போவில் உள்ள இரண்டு வாராந்திர ரயில் சென்னை கோட்டத்தில் உள்ள தாம்பரம் டிப்போவுக்கு மாற்றம் செய்யப்படும். இவ்வாறு மாற்றம் செய்தால் நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலி டிப்போவில் காலியிடங்கள் ஏற்படும். இது இங்கிருந்து கூடுதல் ரயில்களை இயக்க பேருதவியாக இருக்கும் என பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory