» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நீர் மோர் பந்தலுக்கு அனுமதி வழங்குவதில் அரசியல் கூடாது: போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு

சனி 10, மே 2025 11:14:45 AM (IST)

நீர்மோர் பந்தலுக்கு அனுமதி வழங்குவதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அரசியல் செய்யக் கூடாது என்று போலீசாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை பழைய விளாங்குடி அதிமுக பகுதி செயலாளர் சித்தன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், "அதிமுக சார்பில் மதுரை-திண்டுக்கல் சாலையில் விளாங்குடியில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு திறந்துவைத்தார்.

இந்நிலையில், நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி மறுத்து, கூடல்புதூர் போலீசார் நோட்டீஸ் ஒட்டினர். பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறின்றி அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தல் தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்குமாறு உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் தண்டபாணி, சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: , தற்போது கடுமையான வெயில் காலம். மக்களின் நலன் கருதி ஒரு கட்சி சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பந்தல் இருப்பதால் போலீசாருக்கும், மாநகராட்சிக்கும் என்ன பிரச்சினை? எதற்காக நீர் மோர் பந்தலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது? நீர் மோர் பந்தல் அமைக்க காவல் துறை விதித்துள்ள நிபந்தனைகள் வியப்பாக உள்ளன.

இரண்டு தண்ணீர் பானை வைக்கும் அளவுக்கு மட்டுமே பந்தல் அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அது எவ்வாறு முடியும்? இந்த உத்தரவை பிறப்பித்த காவல் துறை அதிகாரி படித்தவரா? இரண்டு பானைகள் வைக்கும் அளவுக்கு எப்படி பந்தல் அமைக்க முடியும்? இந்த நிபந்தனைகள் ஏற்கத்தக்கது அல்ல.

காவல் துறையினர் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அரசியல் செய்யாமல், தங்கள் கடமையை செய்ய வேண்டும். வெயில் காலத்தில் அனைத்து கட்சிகளும் நீர் மோர் பந்தல் அமைத்துள்ளன. ஆனால், மனுதாரர் கட்சிக்கு மட்டும் அனுமதி மறுத்ததை ஏற்க முடியாது. எனவே, அதிமுக தரப்பில் நீர் மோர் பந்தல் அமைக்க எவ்வித நிபந்தனையும் விதிக்காமல் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory