» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 2000 பயனாளிகள் தேர்வு: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
சனி 10, மே 2025 4:31:37 PM (IST)

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2000 பயனாளிகளுக்கு புதிய வீடுகள் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் த.மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தோவாளை, இராஜாக்கமங்கலம், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பயனாளிகளுக்கு புதிய வீடுகள் கட்டுவதற்கான ஆணை மற்றும் கட்டி முடிக்கப்பட்ட பயனாளிகளுக்கு திறவுகோல் வழங்கும் நிகழ்ச்சியானது மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில் செண்பகராமன்புதூர் தனியார் திருமண மண்டபத்தில் இன்று (10.05.2025) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் கலந்துகொண்டு பேசுகையில் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டிற்கு தேவையான ஆக்கப்பூர்வமான பல்வேறு முன்னெடுப்பு பணிகளை மேற்கொண்டு அவற்றில் வெற்றிபெற்று பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருவதோடு, மக்கள் அனைவரின் மகிழ்ச்சியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். அதனடிப்படையில் குடிசை இல்லா தமிழகம் என்ற கோட்பாட்டின்படி 2024-25-ஆம் நிதியாண்டில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் ஒரு வீட்டிற்கு ரூ.3.50 இலட்சம் என்ற மதிப்பீட்டில் ஒரு இலட்சம் வீடுகள் கட்டிட ரூ.3500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 1790 வீடுகளுக்கு ரூ.55.64 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டதன் அடிப்படையில் இதுநாள் வரை 1374 வீடுகள் ரூ.48.09 கோடி மதிப்பில் முழுமையாக கட்டி முடிக்கபட்டு சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் எஞ்சிய 416 வீடுகள் ஜூன் மாதத்திற்குள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2025-26-ம் ஆண்டில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 2000 வீடுகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதன் அடிப்படையில் நாளது தேதிவரை 1974 வீடுகளுக்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு கிராம சபையில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதில் இலவச மனைப்பட்டா வழங்கப்பட்ட மலைவாழ் பழங்குடியினர் வகுப்பை சார்ந்த 257 பயனாளிகளும் அடங்குவர் என்பது மிகவும் பெருமைக்குரியதாகும்.
இன்றைய நிகழ்வில் தோவாளை ஊராட்சிக்குட்பட்ட 20 பயனாளிகளுக்கு திறவுகோல், 30 பயனாளிகளுக்கு வேலை உத்தரவு ஆணை, அகஸ்தீஸ்வரம் ஊராட்சிக்குட்பட்ட 25 பயனாளிகளுக்கும், இராஜாக்கமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட 25 பயனாளிகளுக்கும் வேலை உத்தரவு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. வேலை உத்தரவு பணி ஆணை பெறப்பட்ட அனைவரும் உடனடியாக பணிகளை தொடங்கி பயன்பாட்டிற்கு கொண்டுவர ஊராட்சித்துறை செயற்பொறியாளர், பொறியாளர்கள், பயனாளிகள் உள்ளிட்டோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கடந்த நான்கு ஆண்டு காலத்தில் நமது மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களுக்காக நாம் பெற்றிருக்கக்கூடிய நிதி என்பது மிகவும் அதிகம். பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் பல துறைகளின் மூலமாக நமது மாவட்டத்திற்கு பெறப்பட்டுள்ளது. ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த ஒரு குழந்தை அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி முடிப்பதற்கு தேவையான அனைத்து தேவைகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு வழங்கி வருகிறது.
குடும்ப சூழ்நிலையில் பின்தங்கி உள்ளவர்களை கண்டறிந்து அவர்களது வாழ்க்கை தரத்தினை முன்னேற்றுவது ஒரு அரசின் கடமை. அந்த கடமையை நமது தமிழ்நாடு அரசு சிறப்பாக நிறைவேற்றி வருகிறது. இதுபோன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகின்ற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், துறை சார்ந்த அமைச்சர் பெருமக்களுக்கும் நாம் என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என பேசினார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் தலைவர் என்.சுரேஷ் ராஜன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், உதவி திட்ட அலுவலர் பாக்கிய லீலா, செயற்பொறியாளர் ஜாண் சுகிர்த ராஜ், உதவி செயற்பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயா, தங்கராஜ், நீல பாலகிருஷ்ணன், சேகர், தோவாளை வட்டாட்சியர் கோலப்பன், ஐ.கேட்சன், பூதலிங்கம் பிள்ளை, பயனாளிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு மாதிரிப் பள்ளியில் ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு
சனி 10, மே 2025 8:21:06 PM (IST)

தேசிய சராசரியைவிட தமிழகத்தில் கல்வித் தரம் சிறப்பாக உள்ளது : மாநில திட்டக் குழு தகவல்
சனி 10, மே 2025 5:51:33 PM (IST)

பாகிஸ்தான் என்ற நாடு இனியும் இருக்கக் கூடாது : அஞ்சுகிராமத்தில் அண்ணாமலை பேச்சு
சனி 10, மே 2025 5:02:28 PM (IST)

ஆம்புலன்ஸ் பணிகளுக்கு மே 12ல் ஆட்கள் தேர்வு முகாம்: ஆட்சியர் தகவல்
சனி 10, மே 2025 4:47:43 PM (IST)

மகளிர் சுய உதவி குழுவினரின் மீன் உற்பத்தி பொருட்களை ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
சனி 10, மே 2025 4:02:48 PM (IST)

தமிழ்நாட்டில் இடி மின்னலுடன் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
சனி 10, மே 2025 12:30:31 PM (IST)
