» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் 2026ல் மக்கள் திமுகவை ஏற்கப்போவது இல்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
புதன் 14, மே 2025 5:47:38 PM (IST)
தமிழகத்தில் 2026ல் மக்கள் திமுகவை ஏற்கப்போவது இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதற்கு அதிமுக அரசுதான் காரணம் என எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், "இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ஊட்டி போட்டோஷூட்டுக்கு இடையே ஒரு பேட்டி கொடுத்துள்ளார். பொள்ளாச்சி வழக்கில், கைது செய்ததும், சிபிஐ-க்கு மாற்றியதும் அஇஅதிமுக அரசு; விசாரித்தது சிபிஐ; தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்!
இதில் மாநில திமுக அரசுக்கோ, ஸ்டாலினுக்கோ என்ன பங்கு இருக்கிறது? ஏன் கூச்சமே இல்லாமல் மார்தட்டுகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்?
இவர் கையில் பொள்ளாச்சி வழக்கு இருந்திருந்தால் எந்த லட்சணத்தில் நடத்தியிருப்பார் என்பதற்கு அண்ணா பல்கலை. மாணவி வழக்கும், அண்ணா நகர் சிறுமி பாலியல் வழக்குமே சாட்சி!
கொடநாடு வழக்கில் வழக்குப் பதிந்ததும், குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது அஇஅதிமுக அரசு! கொடும் குற்றம் புரிந்த கேரளத்தைச் சேர்ந்த குற்றவாளிகளுக்காக வாதாடியவர் திமுகவைச் சார்ந்த வழக்கறிஞர்! ஜாமீன்தாரர் திமுகவை சார்ந்தவர்! வெளிமாநில குற்றவாளிகளுக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு?
தான் ஆளுங்கட்சி என்பதையே மறந்துவிட்டு, இன்னும் தன்னை எதிர்க்கட்சித் தலைவராகவே நினைத்துக் கொண்டிருக்கிறாரா? இதையெல்லாம் பார்க்கும்போது, உங்களுக்கு மறதி அதிகமாக இருக்கிறது என்று மக்கள் பேசுவது உண்மைதானோ? என்று கேட்கத் தோன்றுகிறது.
அஇஅதிமுக வலியுறுத்தலையடுத்து, மத்திய அரசு தமிழ்நாட்டிற்கான 100 நாள் வேலைத் திட்டம், சென்னை மெட்ரோ 2-ம் கட்டம் ஆகியவற்றிற்கான நிதியை விடுவித்தது என்பதை ஏமாற்று, பித்தலாட்டம் என்று புலம்புகிறார். நான்கு ஆண்டுகளாக நீங்கள் நடத்துவதற்கு பெயர் ஆட்சி என்று சொல்வதுதான் ஆகப்பெரிய ஏமாற்று வேலை!
ஆட்சியில் இருந்தபோதும் சரி, இல்லாத போதும் சரி, நதிநீர் உரிமை முதல் நிதி உரிமை வரை தமிழ்நாட்டிற்கான அனைத்தையும் பெற்றுத் தந்திருக்கின்ற இயக்கம் அதிமுக.
நான் எப்போது மத்திய அமைச்சர்களைச் சந்தித்தாலும், மாநில நலன் குறித்து பேசுவேன்; நிதிகளைக் கேட்டுப் பெறுவேன்! அது என்னுடைய மாநில உணர்வு. மறந்திருந்தால், தில்லி விமான நிலையத்தில் நான் அளித்த பேட்டியைப் பாருங்கள்.
இருமொழிக் கொள்கை முதல் கோதாவரி- காவிரி இணைப்பு திட்டம் வரை பல்வேறு மாநிலக் கோரிக்கைகளை நான் பேசியிருக்கிறேன். நீங்கள் கூறிதான் பேசுகிறோம் என்றெல்லாம் மாயக் கோட்டை கட்ட வேண்டாம்! இத்தனை நாட்கள் "என்னால் நிதியைக் கேட்டுப் பெற முடியுமா?" என்று கேலி பேசியவர், நிதியைப் பெற்றுத் தந்ததும் அதனை ஒப்புக்கொள்ள மறுக்கிறார். இது தானே பித்தலாட்டம்?
மாநிலத்தில் ஆட்சி, மத்தியில் 39 எம்.பி.க்கள் வைத்தும் தன்னால் சாதிக்க முடியாததை, அஇஅதிமுக செய்துவிட்டதே என்ற வயிற்றெரிச்சல் முதல்வருக்கு இருக்கிறது போலும்.
மக்களுக்கும், மாநிலத்திற்கும் நன்மை நடப்பதைக்கூட ஏற்க முடியாத உங்களை, 2026-ல் நிச்சயம் மக்கள் ஏற்கப்போவது இல்லை!" என்று பதிவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அதிமுக ஆட்சியில் பாலியல் குற்றவாளிகளை பாதுகாத்து வந்தனர் : கனிமொழி எம்பி குற்றச்சாட்டு
செவ்வாய் 13, மே 2025 5:34:53 PM (IST)

யார் வெட்கித் தலைகுனிய வேண்டும்? முதல்வர் மீது இபிஎஸ் விமர்சனம்!
செவ்வாய் 13, மே 2025 4:34:17 PM (IST)

பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு நீதிக்குக் கிடைத்த வெற்றி: பிரேமலதா விஜயகாந்த் வரவேற்பு
செவ்வாய் 13, மே 2025 4:04:08 PM (IST)

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை!
செவ்வாய் 13, மே 2025 3:58:04 PM (IST)

பாஜக சார்பில் ஆபரேஷன் சிந்தூர் வெற்றி பேரணி : நயினார் நாகேந்திரன் அறிவிப்பு
செவ்வாய் 13, மே 2025 12:41:47 PM (IST)

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மண்டலத்தில் 97.39 சதவீதம் தேர்ச்சி!
செவ்வாய் 13, மே 2025 12:28:32 PM (IST)
