» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆரல்வாய்மொழியில் 5 ஆண்டுகளுக்கு பிறகு நின்று சென்ற எக்ஸ்பிரஸ் ரயில்கள்!

செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 8:48:08 AM (IST)



ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்தில் 5 ஆண்டுகளுக்கு பிறகு எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று சென்றதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆரல்வாய்மொழியில் 3 நடை மேடைகள் கொண்ட ரயில் நிலையம் உள்ளது. இதன்மூலம் ஆரல்வாய்மொழி மற்றும் சுற்றியுள்ள குமாரபுரம், ஆவரைகுளம், அம்பலவாணபுரம், செண்பகராமன்புதூர், தோவாளை, மருங்கூர், மயிலாடி, பூதப்பாண்டி போன்ற 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறுகிறார்கள். இந்த ரயில் நிலையம் வழியாக தினமும் ஏராளமான எக்ஸ்பிரஸ் ரயில்கள், பயணிகள் ரயில்கள் செல்கின்றன.

ஆரம்பத்தில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், பெங்களூர் மற்றும் மும்பை எக்ஸ்பிரஸ் ரயில்களை தவிர அனந்தபுரி, கோவை, குருவாயூர், கொல்லம்-புனலூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள், நாகர்கோவில்-நெல்லை பயணிகள் ரயில் போன்றவை ஆரல்வாய்மொழியில் நின்று பயணிகளை ஏற்றியும் இறக்கியும் சென்றன.

இந்தநிலையில் கடந்த 2020-ம் ஆண்டு கோவை எக்ஸ்பிரஸ், கொல்லம்- புனலூர் எக்ஸ்பிரஸ் ஆகியவை இங்கு நின்று செல்வதை ரயில்வே நிர்வாகம் நிறுத்தி விட்டது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த பயணிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வந்தனர்.

இந்த ரயில்களில் வரும் பயணிகள் நாகர்கோவில் சென்று அங்கிருந்து தங்கள் ஊருக்கு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டு வந்தது. சில நேரங்களில் நிலையத்தில் ரயில் மெதுவாக செல்லும்போது பயணிகள் தங்கள் உடைமைகளுடன் நடைமேடையில் குதித்து விடுகிறார்கள். இதில் உயிர்சேதம் ஏற்பட்டு வந்தது.

எனவே, இந்த ரயில்களை ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்தில் மீண்டும் நிறுத்தி செல்ல வேண்டும் என்று அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் போராட்டங்கள் நடத்தினர்.

இந்தநிலையில் நேற்று முதல் நாகர்கோவில் இருந்து செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் காலை 8.13 மணிக்கும், புனலூரில் இருந்து மதுரைக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 9.54 மணிக்கும் ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.

அதன்படி நேற்று காலையில் 8.13 மணிக்கு கோவை எக்ஸ்பிரஸ் ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்தில் நின்றது. அந்த ரயிலுக்கு எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. அத்துடன் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி, எஞ்சின் டிரைவருக்கு சால்வே அணிவிக்கப்பட்டது.

இந்தநிகழ்ச்சியில் மாநில பா.ஜனதா செயலாளர் மீனா தேவ், ஆரல்வாய்மொழி பேரூராட்சித் தலைவர் முத்துக்குமார், பா.ஜனதா ஒன்றிய செயலாளர் நரேந்திர குமார், ஒன்றிய இளைஞரணி தலைவர் சந்திரகுமார், பா.ஜனதா ஊடக பிரிவு தலைவர் ஆட்டோராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் சிவகுமார் தலைமையில் துணைத் தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் எஸ்.என்.ராஜா உள்பட பலரும் நின்று சென்ற ரயிலுக்கு வரவேற்பு அளித்தனர். 5 ஆண்டுகளுக்கு பிறகு எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்வதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory