» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
முதல்வர் ஸ்டாலினுடன் ராஜ்நாத் சிங் பேச்சு : சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கோரினார்
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 11:17:21 AM (IST)

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்குமாறு முதல்வர் ஸ்டாலினிடம் மத்திய அமைச்சர்ராஜ்நாத் சிங் தொலைபேசியில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கரின் பதவிக் காலம் வரும் 2027 ஆகஸ்ட் வரை உள்ள நிலையில், உடல்நிலையை காரணம் காட்டி அவர் தனது பதவியை கடந்த ஜூலை 21-ம் தேதி திடீரென ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டதை அடுத்து, மத்திய அரசிதழிலும் அதுகுறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டது.
இதையடுத்து, புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் உடனடியாக தொடங்கியது. போட்டி இருக்கும் பட்சத்தில் செப்டம்பர் 9-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
குடியரசு துணைத் தலைவரை மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் இணைந்து தேர்வு செய்வார்கள். மக்களவையில் தற்போது 542 எம்.பி.க்கள் உள்ளனர். ஒரு இடம் காலியாகஉள்ளது. அதேபோல, மாநிலங்களவையில் 239 எம்.பி.க்கள் உள்ளனர். அங்கு 6 இடங்கள் காலியாக உள்ளன. குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. மனுக்களை தாக்கல் செய்ய ஆகஸ்ட் 21-ம் தேதி கடைசி நாள். மனுக்கள் 22-ம் தேதி பரிசீலிக்கப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியல் 25-ம் தேதி வெளியிடப்படும். இந்நிலையில், மக்களவை, மாநிலங்களவையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளது. இதனால், இந்த கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கே வெற்றி என்பது உறுதியாகியுள்ளது.
இந்த சூழலில்தான், டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சிமன்றக் குழு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. பிரதமர் மோடியின் இல்லத்தில் அவரது தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா. மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதை தொடர்ந்து, குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக தற்போது மகாராஷ்டிரா ஆளுநராக உள்ள தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்தார். இந்நிலையில், பிரதமர் மோடியை சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார். கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கேட்டு, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மட்டுமின்றி, பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களும் மற்ற கட்சிகளின் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், குடியரசு துணைத் தலைவராக ஒருமித்த கருத்துடன் சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதில் பாஜக தலைமை முனைப்புடன் உள்ளது. இதற்காக, இண்டியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று தொலைபேசியில் அழைத்து ஆதரவு கோரியுள்ளார். இதன் தொடர்ச்சியாக, இண்டியா கூட்டணியில் உள்ள பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களையும் தொலைபேசியில் அழைத்து அவர் ஆதரவு கோரி வருகிறார்.
அந்த வகையில், இண்டியா கூட்டணியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான தமிழக முதல்வர் ஸ்டாலினை ராஜ்நாத் சிங் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் போட்டியிடும் தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்ததாக கூறப்படுகிறது.
திமுகவுடன் கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்களுடனும் அவர் தொலைபேசியில் உரையாடி, ஆதரவு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் முக்கிய தலைவர்களுடனும் ராஜ்நாத் சிங் பேசி, ஆதரவு திரட்டி வருகிறார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது வாழ்த்து செய்தியில், ‘எதிர்காலத்தில் சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசுத் தலைவராகவும் உயர்வார்’ என்று குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, இண்டியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதன் சார்பில் நிறுத்தப்படும் பொது வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அதிமுக கூட்டத்திற்கு நடுவே இடையூறாக வந்த ஆம்புலன்ஸ்: ஓட்டுநரை எச்சரித்த இபிஎஸ்!
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 12:15:51 PM (IST)

தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி காலமானார்
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 12:05:01 PM (IST)

வீட்டில் சமையலறையில் 5 குட்டிகளுடன் பதுங்கி இருந்த மரநாய் மீட்பு!
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 11:44:22 AM (IST)

இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் அரசு பள்ளி மாணவனுக்கு உயர்கல்வி!
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 11:33:01 AM (IST)

மதுரை தவெக மாநாடு: போக்குவரத்து வழித்தட மாற்றங்கள் குறித்து காவல்துறை அறிவிப்பு!
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 11:00:34 AM (IST)

குமரி மாவட்டத்தில் 3 தாலுகாக்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் அறிவிப்பு
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 8:51:04 AM (IST)
