» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுக கூட்டத்திற்கு நடுவே இடையூறாக வந்த ஆம்புலன்ஸ்: ஓட்டுநரை எச்சரித்த இபிஎஸ்!

செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 12:15:51 PM (IST)

தி.மு.க. அரசு வேண்டும் என்றே ஒவ்வொரு கூட்டத்திலும் நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ்களை விட்டு இடையூறு செய்வதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் சட்டமன்ற தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதிக்கு நேற்று வருகை தந்தார். அவரை புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன் மற்றும் கட்சியினர் வரவேற்றனர். இரவு 10.30 மணி அளவில் அணைக்கட்டு எம்.ஜி.ஆர். சிலை அருகே ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசத் தொடங்கிய போது மக்கள் கூட்டத்தின் நடுவே 108 ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. இதை பார்த்து, கோபமடைந்த அவர், தி.மு.க. அரசு வேண்டும் என்றே ஒவ்வொரு கூட்டத்திலும் இது போன்ற நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ்களை விட்டு இடையூறு செய்கின்றனர்.

மக்களுக்கு ஏதாவது ஏற்பட்டால் யார் பொறுப்பு?. இதுதான் தி.மு.க.வின் கேவலமான செயலாகும். இந்த ஆம்புலன்சில் நோயாளி இல்லை. நேருக்கு நேர் மோத திராணி தெம்பு இல்லாத தி.மு.க. அரசு வேண்டுமென்றே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறது. நான் பேசிய 30 கூட்டங்களிலும் ஆம்புலன்ஸ்களை இடையூறாக விட்டு உள்ளனர். இதன் மூலம் எச்சரிக்கை விடுக்கிறேன். அடுத்த கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்தால் அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அதில் நோயாளியாக மருத்துவமனைக்கு செல்வார். இதுகுறித்து காவல் துறையில் நிர்வாகிகள் புகார் அளிக்க வேண்டும் என்றார். இதனால் கூட்டத்தில் சலசலப்பும், பரபரப்பும் ஏற்பட்டது.

ஆம்புலன்ஸ் டிரைவர் புகார்

இச்சம்பவம் குறித்து ஆம்புலன்ஸ் டிரைவர் கூறியதாவது:-  பள்ளிக்கொண்டாவில் வேலை பார்க்கிறேன். பெண் நோயாளி ஒருவரை அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதால், அணைக்கட்டு சென்ற போது அ.தி.மு.க.வினரிடம் கூட்டம் முடிந்து விட்டதா என கேட்டேன். கூட்டம் முடிந்து விட்டது என கூறியதால் அவ்வழியாக சென்றேன். அங்கிருந்தவர்கள் என்னை தாக்கி, வாகனத்தை சேதப்படுத்தினர் என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory