» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக மீது கடும் அதிருப்தி: துரை வைகோ கருத்து குறித்து வைகோ விளக்கம்!

செவ்வாய் 2, ஜூன் 2026 3:47:48 PM (IST)

மதிமுக தொண்டர்களின் நியாயமான ஆதங்கத்தையே துரை வைகோ வெளிப்படுத்தியுள்ளார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விளக்கியுள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்திக்கப்பட்டதாகவும், இதனால் மதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் ஏற்பட்ட நியாயமான ஆதங்கத்தையே துரை வைகோ வெளிப்படுத்தியுள்ளார் என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "நாங்கள் திமுக தலைமையிலான கூட்டணியில் உறுதியாக நின்று அனைத்துத் தொகுதிகளிலும் உடல், பொருள், ஆவியைக் கொடுத்துப் பணியாற்றினோம். நான் 34 தொகுதிகளில் தீவிரப் பிரசாரம் செய்ததால் 24 தொகுதிகளில் திமுக வென்றது. 

அதேபோல், திமுகவின் ஆதரவால்தான் எங்களுடைய 2 பேரவை உறுப்பினர்கள் வெற்றி பெற்றார்கள். மற்ற 2 இடங்களில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும், திமுகவின் இந்த உன்னத வெற்றிக்கு எங்கள் பங்களிப்பு ஒரு சிறிய காரணமாக இருந்திருக்கிறது. திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு அதிக இடங்கள் கொடுக்கப்பட்ட நிலையில், எங்களுக்கு வெறும் 4 இடங்கள்தான் கொடுக்கப்பட்டது. இது எங்கள் தோழர்கள் மனதில் பெரும் ஆதங்கத்தை ஏற்படுத்தியது.

தொகுதிகள் ஒதுக்கப்பட்ட விகிதம் மட்டுமின்றி, திமுக கட்சிச் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்ற கடுமையான நிர்பந்தம் அளிக்கப்பட்டது. இறுதி நேரத்தில் நாங்கள் தனிச் சின்னத்தில் போட்டியிடக் கூடாது என்று கூறியதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. நாங்களும் தனிச் சின்னத்தில் போட்டியிட்டிருக்கலாம் என்று நினைத்த ஆதங்கத்தைத்தான் துரை வைகோ தற்போது வெளிப்படுத்தியுள்ளார்."

தற்போதைய அரசியல் நகர்வுகள் குறித்துப் பேசிய வைகோ, "திமுக ஆதரவுடன் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, ஒரு நன்றிகூடச் சொல்லாமல் தவெகவுடன் இணைந்து புதிய அமைச்சரவையிலும் இடம்பெற்றுவிட்டது. அதேபோல, தேமுதிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தவெக அமைச்சரவையில் இடம்பெற்ற நிலைக்கு நாங்கள் செல்லவில்லை. அதுபற்றிய ஆதங்கத்தைத்தான் துரை வைகோ வெளிப்படுத்தியுள்ளார். 

மற்றபடி நாங்கள் அவசரமாக எந்த முடிவும் எடுக்கவில்லை. தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றிப் பேசுவோம். தற்போது எதிர்காலத் திட்டங்கள் பற்றி வரும் ஜூன் 27 ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் விரிவாக விவாதித்து முடிவெடுக்கப்படும்," என்று உறுதியாகத் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory