» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தொடர்கதையாகும் பாலியல் தொல்லைகள்: த.வெ.க அரசுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்!

திங்கள் 15, ஜூன் 2026 8:15:36 PM (IST)

தமிழ்நாட்டில் த.வெ.க அரசு பொறுப்பேற்ற கடந்த ஒரு மாத காலத்தில் ஏராளமான பாலியல் கொடுமைகள் பற்றிய செய்திகள் தினந்தோறும் வந்தவண்ணம் உள்ளதாகத் தூத்துக்குடி திமுக மாவட்டச் செயலாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையின் விபரம்: சில நாட்களுக்கு முன்னதாகத் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த த.வெ.க நிர்வாகிகளால், அதே கட்சியின் பெண் செயல்பாட்டாளராக உள்ள இளம் பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரம் நடந்துள்ளது.

இந்தச் சம்பவம் மக்களிடத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நேற்று (14.06.2026) தூத்துக்குடி ஒன்றியம் தாளமுத்துநகர் அருகே உள்ள ஆனந்த நகரில் உள்ள தேவாலயம் ஒன்றில், 12 வயது சிறுமிக்கு மத போதகராக உள்ள பாதிரியார் அருள்ராஜ் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்தச் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த மத போதகர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக அறியவருகிறது.

இளம் பெண்கள், வயது முதிர்ந்தோர், குழந்தைகள் என எல்லா வயதுப் பெண்களும் இதுபோன்ற பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். 'சிங்கப்பெண் படையை' உருவாக்கிப் பெண்களைப் பாதுகாப்போம் என்று சொல்கின்ற முதலமைச்சர் சுய ஒழுக்கம் பற்றி உபதேசம் செய்து வருகிறார். ஆனால், உருவாக்கப்பட்ட சிங்கப்பெண் படைக்குத் தொடர்பு கொள்ளத் தனியான உதவி எண் எதுவும் இல்லை.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சவால் விட்டு வெற்றுப் பேச்சு பேசி மக்களையும் பெண்களையும் ஏமாற்றுகிறார். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தற்போதைய ஆட்சியில் கேள்விக்குறியாக மாறியுள்ளது. செயல்படாத அரசாக, மக்களைப் பாதுகாக்காத அரசாகத் த.வெ.க அரசு இருந்து வருகிறது. அரசின் மெத்தனமான இப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது என அனிதா ராதாகிருஷ்ணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory