» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பள்ளி அடையாள அட்டையில் சாதி விவரங்கள் இடம்பெறாது: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

சனி 27, ஜூன் 2026 4:34:36 PM (IST)

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள புதிய அடையாள அட்டைகளில் சாதி குறித்த விவரங்கள் இடம்பெறாது என்று வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோர் விளக்கமளித்துள்ளனர்.

ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளி மாணவர்களுக்குச் சாதிப் பெயருடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும் என்று கூறியதாக வெளியான தகவல் தமிழகம் முழுவதும் கடும் விவாதங்களை ஏற்படுத்தியது. இந்தச் சூழ்நிலையில், தனது பேச்சு குறித்து அவர் விரிவான விளக்கத்தை அளித்துள்ளார்.

இது குறித்துச் செங்கோட்டையன் கூறியதாவது: "வருவாய்த் துறையும் கல்வித்துறையும் இணைந்து மாணவர்களுக்கு முகவரி, ரத்த வகை, அடையாள அட்டை மற்றும் கல்வித்தகுதி போன்ற விவரங்களை உள்ளடக்கிய தரவுகளை க்யூ.ஆர் கோடு (QR Code) மூலமாக வழங்கலாமா என்பது குறித்து மட்டுமே ஆலோசித்து வருகிறோம். கடந்த ஐந்து ஆண்டுகளாக, வருவாய்த் துறை அதிகாரிகள் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அவர்கள் பயிலும் பள்ளிகளுக்கே நேரடியாகச் சென்று சாதிச் சான்றிதழ்களை வழங்கி வருகின்றனர். இந்த நடைமுறை இனியும் தொடரும்.

அதே நேரத்தில், தற்போது வழங்கப்படவுள்ள புதிய அடையாள அட்டைத் தரவுகளில் சாதி குறித்த விவரங்கள் கண்டிப்பாக இடம் பெறாது. பள்ளிகளில் மாணவர்கள் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும். விபத்துகள் போன்ற அவசர காலங்களில் மாணவர்களுக்குத் தேவையான உடனடி மருத்துவ நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ரத்த வகை மற்றும் முகவரித் தரவுகள் மட்டுமே பயன்படுத்தப்படும். பத்திரிகைகளில் வந்த செய்திகளைப் போல, இந்த அடையாள அட்டைத் தரவுகளில் சாதிச் சான்றிதழ்கள் இணைக்கப்படாது" என்று அவர் தெளிவுபடுத்தினார்.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் உறுதி:

இதே விவகாரம் தொடர்பாகப் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனும் தனது துறையின் நிலைப்பாட்டை விளக்கியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், "பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் சாதிப் பெயர் தேவை இல்லை. புதிய ஐடி கார்டுகளில் சாதிப் பெயரைப் போட மாட்டோம், போடவே மாட்டோம்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். அமைச்சர்களின் இந்தத் தொடர் விளக்கங்கள் மூலம் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த அடையாள அட்டை சாதி சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory