» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி!!

சனி 4, அக்டோபர் 2025 4:17:33 PM (IST)



வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 140 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. அதன்படி இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 44.1 ஓவர்களில் 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் சிராஜ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய 2ம் நாள் முடிவில் 128 ஓவரில் 5 விக்கெட்டை 448 ரன்கள் குவித்திருந்தது. இந்தியா தரப்பில் ஜடேஜா 104 ரன்னுடனும், வாஷிங்டன் சுந்தர் 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்தியா நேற்று வரை 286 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இந்நிலையில், இன்று 3ம் நாள் ஆட்டம் நடந்தது.

இன்றைய ஆட்டம் தொடங்கும் முன்னரே இந்திய அணி தனது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதன் காரணமாக 286 ரன்கள் பின்னிலையுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. ஜான் கேம்பல் மற்றும் டேகனரின் சந்தர்பால் களம் புகுந்தனர். இதில் டேகனரின் சந்தர்பால் 8 ரன்னிலும், ஜான் கேம்பல் 14 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இதையடுத்து களம் புகுந்த அலிக் அதனேஸ் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. இதில் பிரண்டன் கிங் 5 ரன், ரோஸ்டன் சேஸ் 1 ரன், ஷாய் ஹோப் 1 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். தொடர்ந்து ஜஸ்டின் கிரீவ்ஸ் களம் புகுந்தார்.

இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது 2வது இன்னிங்சில் 45.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 146 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இன்னிங்ஸ் மற்றும் 140 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், சிராஜ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என இந்தியா முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 10ம் தேதி தொடங்குகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory