» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
கோலி அபார சதம்: தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி போராடி வெற்றி!
திங்கள் 1, டிசம்பர் 2025 8:38:55 AM (IST)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி போராடி வெற்றி பெற்றது. விராட் கோலி சதம் அடித்தார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. இதன்படி இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று அரங்கேறியது. தென்ஆப்பிரிக்க அணியில் உடல்நலக்குறைவால் கேப்டன் பவுமா ஒதுங்கியதால், மார்க்ரம் அணியை வழிநடத்தினார்.
‘டாஸ்’ ஜெயித்த தென்ஆப்பிரிக்க கேப்டன் மார்க்ரம், இரவு பனியின் தாக்கத்தை மனதில் கொண்டு முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார். இதையடுத்து ஜெய்ஸ்வாலும், ரோகித் சர்மாவும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். பேட்டிங்குக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் ஜெய்ஸ்வால் பவுண்டரியுடன் தொடங்கினார். ஆனால் அவரது பேட்டிங்குக்கு ஆயுசு குறைவு. 18 ரன்னில் விக்கெட் கீப்பர் டி காக்கிடம் கேட்ச் ஆனார்.
2-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மாவுடன், விராட் கோலி கைகோர்த்தார். அனுபவசாலியான இருவரும் ேநர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவ்வப்போது பந்தை எல்லைக்கோட்டுக்கு ஓடவிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தினர். 13.3 ஓவர்களில் இந்தியா 100 ரன்களை தொட்டது. சுப்ராயனின் ஒரே ஓவரில் ேராகித் சர்மா 2 சிக்சர் அடித்தார். இதே போல் கார்பின் பாசின் ஓவரில் கோலி அடுத்தடுத்து 2 சிக்சர் தூக்கி சிலிர்க்க வைத்தார். இதனால் ரன்ரேட் 7-க்கு மேலாக சென்றது.
அணியின் ஸ்கோர் 161-ஐ எட்டிய போது ரோகித் சர்மா 57 ரன்களில் (51 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) யான்செனின் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து வந்த ருதுராஜ் கெய்க்வாட் (8 ரன்), வாஷிங்டன் சுந்தர் (13 ரன்) நிலைக்கவில்லை.
இதைத் தொடர்ந்து விராட் கோலியுடன், கேப்டன் லோகேஷ் ராகுல் ஜோடி சேர்ந்தார். இவர்கள் விக்கெட் சரிவை தடுத்து மீண்டும் உத்வேகத்தை மீட்டெடுத்தனர். கலக்கலாக ஆடிய கோலி பவுண்டரியுடன் தனது 52-வது சதத்தை பூர்த்தி செய்தார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 6-வது சதமாகவும், இந்த மைதானத்தில் அவரது 3-வது சதமாகவும் அமைந்தது.
செஞ்சுரியை தொட்ட மறு ஓவரிலேயே அவரது பேட் மின்னல் வேகத்தில் சுழன்றடித்தது. சுப்ராயனின் ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி விரட்டி ஸ்டேடியத்தை மகிழ்ச்சி வெள்ளத்தில் குலுங்க வைத்தார். இரட்டை சதம் அடிப்பதற்குரிய ஒரு வாய்ப்பு தென்பட்ட போதிலும் 7 ஓவர் எஞ்சியிருந்த போது விக்கெட்டை இழந்தார். கோலி 135 ரன்களில் (120 பந்து, 11 பவுண்டரி, 7 சிக்சர்) கேட்ச் ஆனார். இதன் பின்னர் லோகேஷ் ராகுலும் (60 ரன், 56 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), ரவீந்திர ஜடேஜாவும் (32 ரன்) அணி வலுவான ஸ்கோரை அடைய உதவினர்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட்டுக்கு 349 ரன்கள் குவித்தது. இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.அடுத்து 350 ரன் இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்க அணிக்கு ஒரே ஓவரில் ஹர்ஷித் ராணா ‘இரட்டை செக்’ வைத்தார். அவரது பந்து வீச்சில் ரையான் ரிக்கெல்டன், குயின்டான் டி காக் டக்-அவுட் ஆனார்கள். கேப்டன் மார்க்ரமை (7 ரன்) அர்ஷ்தீப்சிங் வெளியேற்றினார். 11 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை தாரைவார்த்த போதிலும் தென்ஆப்பிரிக்க பேட்டர்கள் மனம் தளரவில்லை. அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் முடிந்த வரை வேகம் காட்டினர். அத்துடன் பனியால் பந்து ஈரமானதால் சரியாக ‘கிரிப்’ கிடைக்காமல் இந்திய பவுலர்கள் சிரமப்பட்டனர். இது தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு வசதியாக போனது.
விக்கெட் சரிவுக்கு மத்தியிலும் இடைவிடாது ரன்வேட்டை நடத்தினர். டோனி டி ஜோர்ஜி (39 ரன்), டிவால்ட் பிரேவிஸ் (37 ரன்), மார்கோ யான்சென் (70 ரன், 39 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்), மேத்யூ பிரீட்ஸ்கே (72 ரன், 80 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவர்களுக்கு நம்பிக்கை அளித்தனர். இதனால் ஆட்டம் எந்த பக்கம் போகும் என்பதை கணிக்க முடியாததால் கடைசி வரை துளியும் பரபரப்புக்கு குறைவில்லாமல் சென்றது. இறுதிகட்டத்தில் ஆக்ரோஷமாக ஆடிய ஆல்-ரவுண்டர் கார்பின் பாஷ் இந்திய பவுலர்களை மிரள விட்டார். இறுதி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 18 ரன் தேவைப்பட்டது. கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது.
பரபரப்பான கடைசி ஓவரை வேகப்பந்து விச்சாளர் பிரசித் கிருஷ்ணா வீசினார். முதல் பந்தில் ரன் எடுக்காத கார்பின் பாஷ் (67 ரன், 51 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) அடுத்த பந்தை தூக்கியடித்தார். அதை ரோகித் சர்மா லாவகமாக கேட்ச் செய்தார். தென்ஆப்பிரிக்க அணி 49.2 ஓவர்களில் 332 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 17 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி வருகிற 3-ந்தேதி ராய்ப்பூரில் நடக்கிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மகளிர் ஐபிஎல் 2026 அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் மும்பை-பெங்களூரு மோதல்!
சனி 29, நவம்பர் 2025 5:20:14 PM (IST)

யு-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டி : போர்ச்சுகல் அணி சாம்பியன்!
சனி 29, நவம்பர் 2025 11:38:37 AM (IST)

கவுகாத்தியில் அபார வெற்றி: இந்திய மண்ணில் வரலாறு படைத்த தென் ஆப்பிரிக்கா!
புதன் 26, நவம்பர் 2025 12:48:38 PM (IST)

2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் அட்டவணை வெளியீடு!
புதன் 26, நவம்பர் 2025 11:53:24 AM (IST)

உலகக் கோப்பை குத்துச்சண்டை பதக்க பட்டியலில் இந்திய அணி முதலிடம் : பிரதமர் வாழ்த்து
திங்கள் 24, நவம்பர் 2025 5:29:45 PM (IST)

கவுகாத்தி டெஸ்டில் வலுவான நிலையில் தென்ஆப்பிரிக்கா: இந்தியா 201 ரன்னில் ஆல்-அவுட்
திங்கள் 24, நவம்பர் 2025 4:21:28 PM (IST)




