» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரிய மனு தள்ளுபடி!

சனி 17, ஜனவரி 2026 8:34:16 AM (IST)

ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரிய தயாரிப்பு நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நடிகர் விஜய், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஜனநாயகன்' படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்து, அந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரியம் கடந்த 5-ந்தேதி பரிந்துரை செய்தது.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அந்த படத்தை தயாரித்துள்ள கே.வி.என்.புரொடக்‌ஷன் நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ‘ஜனநாயகன்' படத்தை மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்த தணிக்கை வாரிய தலைவரின் உத்தரவை ரத்துசெய்து படத்துக்கு தணிக்கை சான்றிதழை உடனடியாக வழங்க உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்தது.இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, தனி நீதிபதி தீர்ப்புக்கு தடை விதித்து விசாரணையை 20-ந்தேதிக்கு தள்ளிவைத்தது.இந்த உத்தரவை எதிர்த்து பட தயாரிப்பு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

அந்த மனுவில், ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதித்து தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, ஏ.ஜி.மசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, சென்னை ஐகோர்ட்டில் இந்த வழக்கு 20-ந்தேதி விசாரணைக்கு வர உள்ள நிலையில் ஏன் இவ்வளவு அவசரமாக சுப்ரீம் கோர்ட்டை நாடினீர்கள்? என பட தயாரிப்பு நிறுவன வக்கீலிடம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மீண்டும் ஐகோர்ட்டுக்கு செல்லுங்கள் என அறிவுறுத்தினர்.

அதற்கு பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் குறிப்பிட்ட தேதியில் திரைப்படத்தை வெளியிடவில்லை என்றால் அது எங்களுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த வழக்கில் நாங்கள் தலையிட விரும்பவில்லை எனக்கூறி பட தயாரிப்பு நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.

மேலும், வருகிற 20-ந்தேதி ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சு இந்த வழக்கை விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். ஜனநாயகன் பட விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட மறுத்ததால் படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory