» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வாக்காளர்களுக்கு விநியோகிக்க ரூ.200 கோடி பதுக்கலா? நெல்லையில் அதிகாரிகள் அதிரடி சோதனை!

புதன் 8, ஏப்ரல் 2026 5:20:34 PM (IST)

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ரூ. 200 கோடி பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அங்கு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகச் சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 5-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பட்டுவாடா செய்யப்படுவதைத் தடுக்கத் தேர்தல் ஆணையம் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. இதற்காகத் தமிழகம் முழுவதும் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், நெல்லை பாளையங்கோட்டை தொகுதிக்குட்பட்ட பெருமாள்புரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக சுமார் ரூ. 200 கோடி ரொக்கப் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் பறக்கும் படையினருக்கு இன்று காலை ரகசியத் தகவல் கிடைத்தது.

இந்தத் தகவலைத் தொடர்ந்து, தேர்தல் அதிகாரிகள் மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் குவிந்தனர். அங்குள்ள வீடுகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் குறிப்பிட்ட இடம் குறித்துத் தெளிவானத் தகவல் இல்லாததால், அந்த அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் அதிகாரிகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும், சோதனையைத் தடையின்றி நடத்தவும் குடியிருப்பைச் சுற்றிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பெரிய அளவிலான தொகை பதுக்கப்பட்டிருப்பதாக எழுந்த இந்தத் தகவல், பாளையங்கோட்டை மற்றும் நெல்லை மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory