» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழக அமைச்சரவை மாற்றம்: துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின்: 3 அமைச்சர்கள் அதிரடி நீக்கம்!
ஞாயிறு 29, செப்டம்பர் 2024 9:19:43 AM (IST)

தமிழக அமைச்சரவை நேற்று இரவு மாற்றம் செய்யப்பட்டது. செந்தில் பாலாஜி உள்பட 4 பேருக்கு வாய்ப்பு அளிக்கப் பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராக இன்று பதவி ஏற்கிறார்.
தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு அமைந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட 35 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்கும்போதே உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பு ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படவில்லை. கடந்த 2022-ம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை வழங்கப்பட்டது.
இந்தநிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பதவி வழங்கவேண்டும் என்று முக்கிய அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கோரிக்கை எழுப்பி வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு, உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பதவி எப்போது வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் கேட்டபோது, கோரிக்கை வலுத்து இருக்கிறதே தவிர பழுக்கவில்லை என்று பதில் அளித்தார்.
ஆனால் அமெரிக்கா சென்றுவிட்டு திரும்பிய பின்னர் இதே கேள்விக்கு பதில் அளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது என்று பதில் அளித்தார். இதனால் அமைச்சரவை மாற்றம் விரைவில் இருக்கும் என்றும், உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்-அமைச்சராவார் என்றும் கட்சி தொண்டர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
இதனிடையே சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருந்த செந்தில் பாலாஜி, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து இருந்தார். சிறையில் இருந்த அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் கொடுத்ததால், அவரும் வெளியே வந்துவிட்டார். எனவே அவருக்கும் அமைச்சரவையில் இடம் இருக்கும் என்று கூறப்பட்டது.
இந்தநிலையில் அமைச்சரவை மாற்றம் மற்றும் புதிய அமைச்சர்கள் குறித்த முதல்-அமைச்சரின் பரிந்துரை கடிதம், கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து அமைச்சரவை மாற்றத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று இரவு ஒப்புதல் அளித்தார். இது தொடர்பாக கவர்னர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது.
முதல்-அமைச்சரின் பரிந்துரையை ஏற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராக நியமிக்கப்படுகிறார். தற்போது அமைச்சர்களாக இருக்கும் செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன், மனோ தங்கராஜ் ஆகியோர் அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்படுகிறார்கள். அதற்கு பதில் செந்தில் பாலாஜி, நாசர், கோவி.செழியன், ராஜேந்திரன் ஆகியோர் புதிய அமைச்சர்களாகிறார்கள்.
6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி உயர்கல்வித்துறை அமைச்சரான பொன்முடிக்கு வனத்துறையும், நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரான தங்கம் தென்னரசுவுக்கு நிதி மற்றும் சுற்றுச்சூழல் நலத்துறையும், சுற்றுச்சூழல் அமைச்சரான வி.மெய்யநாதனுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரான கயல்விழிக்கு மனிதவள மேம்பாட்டுத்துறையும், வனத்துறை அமைச்சரான மதிவேந்தனுக்கு ஆதிதிராவிடர் நலத்துறையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரான ராஜகண்ணப்பனுக்கு காதி மற்றும் பால்வளத் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன.
புதிய அமைச்சர்களுக்கான பதவி ஏற்பு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.30 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடைபெறுகிறது. மேற்கண்டவாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. புதிய அமைச்சர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.
புதிய அமைச்சர்கள் 4 பேருக்கும் என்னென்ன துறை ஒதுக்கப்பட உள்ளது என்பது குறித்து அவர்கள் பதவியேற்றதும் ராஜ்பவன் மூலம் அறிவிக்கப்படும். அமைச்சரவையில் புதிதாக இடம்பெறும் செந்தில்பாலாஜி கரூர் தொகுதியில் இருந்தும், கோவி.செழியன் திருவிடைமருதூர் தொகுதியில் இருந்தும் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
கோவி.செழியன், தமிழக அரசின் தலைமை கொறடாவாகவும் செயல்பட்டு வருகிறார். ராஜேந்திரன் சேலம் வடக்கு தொகுதியில் இருந்தும், ஆவடி நாசர் ஆவடி தொகுதியில் இருந்தும் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவர். அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட ராமச்சந்திரனுக்கு, அரசு தலைமை கொறடா பதவியை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி வேன் மீது ரயில் மோதி 2 மாணவர்கள் பலி: முதல்வர் இரங்கல் - ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!
செவ்வாய் 8, ஜூலை 2025 10:47:13 AM (IST)

ரயில் விபத்தில் 2 மாணவர்கள் பலி: எடப்பாடி பழனிசாமி இரங்கல்
செவ்வாய் 8, ஜூலை 2025 10:40:28 AM (IST)

பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து: மாணவர்கள் 2 பேர் பலி!
செவ்வாய் 8, ஜூலை 2025 10:32:48 AM (IST)

நிலுவை கடன்களை வசூலிக்க முடியாமல் வீட்டு வசதி சங்கங்கள் திண்டாட்டம்: ஊழியர்கள் தவிப்பு!
செவ்வாய் 8, ஜூலை 2025 10:22:55 AM (IST)

அஜித்குமார் கொலை சம்பவத்தைக் கண்டித்து த.வெ.க. போராட்டம் : காவல்துறை அனுமதி!
திங்கள் 7, ஜூலை 2025 5:38:08 PM (IST)

சாலை, மேம்பாலப் பணிகளுக்கு ரூ.7,500 கோடி ஒதுக்கீடு: அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!!
திங்கள் 7, ஜூலை 2025 4:43:39 PM (IST)

ஓட்டு போட்ட முட்டாள்Sep 29, 2024 - 06:35:48 PM | Posted IP 162.1*****