» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
உதயநிதி டி-ஷர்ட் விவகாரம்: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
செவ்வாய் 29, அக்டோபர் 2024 5:18:40 PM (IST)
துணை முதல்வர் டி-ஷர்ட் விவகாரம் தொடர்பான வழக்கில் தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும்' என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை சேலையூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சத்திய குமார் தாக்கல் செய்துள்ள மனுவில், அனைத்து அரசு ஊழியர்களும் முறையான ஆடை அணிந்து வர வலியுறுத்தும் வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளார்.
ஃபார்மல் பேண்ட் ஷர்ட் அல்லது தமிழர் பாரம்பரிய ஆடையான வேட்டி சட்டை அணிந்து வர வேண்டும் என அரசாணையில் கூறியுள்ள போதிலும் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிகளில் உதயசூரியன் சின்னம் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட்டை அணிந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
அரசு ஊழியர்கள் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது அரசியல் கட்சிகளின் சின்னத்தை வெளிப்படுத்த தடை உள்ளதாகக் கூறியுள்ள மனுதாரர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் செயல் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்பதால் அரசு நிகழ்ச்சிகளில் முறையான ஆடைகளை அணிந்து வரும்படி அவருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, துணை முதல்வர் டி சர்ட் அணிவது அரசாணைக்கு எதிரானது என மனுதாரர் தெரிவித்தார். தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், தமிழக அரசின் அரசாணை அரசு ஊழியர்களுக்கு தான் பொருந்தும் என விளக்கமளித்தார்.
இதையடுத்து, அரசு ஊழியர்களுக்கான ஆடை கட்டுப்பாடு குறித்த அரசாணை, அரசியல் சட்ட பதவிகளை வகிப்பவர்களுக்கு பொருந்துமா? டி சர்ட் கேஷுவல் உடையா? அரசியல் சட்ட பதவிகளை வகிப்பவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு உள்ளதா? என பதில்மனு தாக்கல் செய்யும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.