» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

வெள்ளி 2, ஜனவரி 2026 3:53:35 PM (IST)



சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேரோட்டம், இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் வடம்பிடித்து இழுத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள, பிரசித்திபெற்ற சிவாலயங்களுள், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலில், பிரமன், திருமால், சிவன் என மும்மூர்த்திகளும் அருள்புரிவதால், கோயிலில் ஆண்டு முழுவதும், பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்வார்கள். 

தாணுமாலய சுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழிப் பெருந்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். நிகழாண்டு இத்திருவிழா, கடந்த டிச.25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் தினமும், காலை, மாலை வேளைகளில், சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து, பக்தர்களுக்குக் காட்சி அளித்தனர்.

விழாவின், முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம், இன்று(ஜன.2) வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. இதில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டு தேர்வடம் தொட்டு இழுத்து தேரோட்டத்தைத் தொடக்கிவைத்தார். நிகழ்ச்சியில், பால்வளத்துறை அமைச்சர் த.மனோதங்கராஜ், மாவட்ட ஆட்சியர் ரா.அழகு மீனா, வ.விஜய் வசந்த் எம்.பி., தமிழ்நாடு மாநில உணவு ஆணைய தலைவர் என்.சுரேஷ்ராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தேர்த்திருவிழாவில், கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்தும், கேரள மாநிலத்திலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேர்வடம் பிடித்து இழுத்தனர். திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை (ஜன.2) கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory