» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பொன்முடி விவகாரம்: பதிவுத்துறை விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
புதன் 23, ஏப்ரல் 2025 5:10:26 PM (IST)
சைவ, வைணவ சமயங்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசிய அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க பதிவுத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையின் போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பொன்முடியின் சர்ச்சை பேச்சை சுட்டிக்காட்டி, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். 5 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, புகாரின் மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை இன்றைய தினத்துக்கு ஒத்திவைத்திருந்தார்.இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று (ஏப்.23) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், "இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கில் அமைச்சருக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இல்லை என்பதால் அதனை முடித்து வைத்து விட்டதாக தெரிவித்ததை ஏற்றுக் கொண்டு அந்த வழக்கை மதுரை அமர்வு முடித்து வைத்துள்ளது,” என்று தெரிவித்தார்.
அமைச்சர் பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஷ் சிங், "இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில், முதன்மை அமர்வு மீண்டும் அதே விவகாரத்தை எடுக்க அவசியம் இல்லை. அமைச்சரின் முழுமையான பேச்சை கேட்காமல் நடவடிக்கை எடுக்கக் கூடாது. 40 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வு குறித்து அமைச்சர் உள் அரங்கத்தில் பேசிய விவகாரம் தான் இது” என்று வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "தமிழகத்தின் முக்கிய சமயங்களான சைவ மற்றும் வைணவ சமயங்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியின் கருத்துகள், இரு சமயத்தினரின் மனதை புண்படுத்தியுள்ளது. அவரது பேச்சு வெறுப்பு பேச்சு வரம்புக்குள் வருகிறது. இந்தப் பேச்சுக்காக அவர் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இருப்பினும், குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை என காவல்துறை தெரிவித்து இருக்கிறது. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையின் செயல் துரதிஷ்டவசமானது.
வெறுப்பு பேச்சை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. ஏற்கெனவே ஒரு வழக்கில் தண்டிக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு மூலம் சலுகை பெற்றுள்ள அமைச்சர் பொன்முடி, அதனை தவறாக பயன்படுத்தி இருக்கிறார். வெறுப்பு பேச்சு தொடர்பாக அவருக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.” என பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். தாமாக முன்வந்து விசாரணை எடுக்கும் வழக்கை தகுந்த உத்தரவுகளுக்காக தலைமை நீதிபதி முன் சமர்ப்பிக்க.பதிவுத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை புதிய வாக்காளர் பெயர் சேர்க்கும் முகாம்!
சனி 13, டிசம்பர் 2025 5:55:15 PM (IST)

தமிழகத்தில் 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
சனி 13, டிசம்பர் 2025 5:50:12 PM (IST)

திருப்பரங்குன்றம் பிரச்சினைக்கு பாஜக, திமுக அரசுதான் காரணம் : சீமான் குற்றச்சாட்டு!
சனி 13, டிசம்பர் 2025 4:04:43 PM (IST)

தூத்துக்குடியில் ஸ்டால் இன் மால் விற்பனை கண்காட்சி : மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்
சனி 13, டிசம்பர் 2025 3:13:37 PM (IST)

பெருமாநிலங்களை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு சாதனை : முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சனி 13, டிசம்பர் 2025 12:53:04 PM (IST)

அரசு ரப்பர் கழகத்தோட்டத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க கூடாது: சீமான் வலியுறுத்தல்!
சனி 13, டிசம்பர் 2025 11:58:37 AM (IST)


