» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
லாக் அப் மரணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் : விஜய் வலியுறுத்தல்!
செவ்வாய் 1, ஜூலை 2025 10:37:21 AM (IST)
லாக் அப் மரணம் தொடர்பாக தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: அஜித்குமார் காவல் மரண வழக்கில் மக்கள் மனத்தில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. எந்த அளவிற்குக் கொடூரமாக, மனிதாபிமானம் அறவே அற்று, சாமானியருக்கு அநீதி இழைக்கும் அறமற்ற துறையாக, தமிழக உள்துறை அமைச்சர் ஸ்டாலின் அவர்களது நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் காவல் துறை நடந்துகொள்கிறது என்பதை இந்தச் சம்பவம், வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தமிழக அரசு, முதலில் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றது.
தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் அழுத்தத்திற்குப் பிறகும், உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தலையீட்டிற்குப் பிறகும் தான் காவல் துறை தனது நடவடிக்கைகளைத் தொடங்கியது என்பதை நாடறியும்.
இந்த ஆட்சியின் போது நடந்த பல்வேறு போலீஸ் மரண வழக்குகளின் தற்போதைய நிலை என்ன, அவ்வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவர் மீதும் கொலை வழக்கு பதியப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியை இந்த அரசு பெற்றுத் தந்துள்ளதா? கடந்த நான்கு ஆண்டுகளில் 24 பேர் போலீஸ் ஸ்டேஷனில் மரணம் அடைந்திருப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், அந்த 24 பேரின் மரணம் தொடர்பாக, வெள்ளை அறிக்கையைத் தமிழக உள்துறை அமைச்சர் உடனடியாக வெளியிட வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், உயர்நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு, விரைந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அது போலவே இந்த வழக்கிலும் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து, விரைந்து விசாரணை நடத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும்.
இத்தகைய கொடூர சம்பவம் இனி ஒருபோதும் நடைபெறாது என்று உள்துறை அமைச்சர் ஸ்டாலின், தமிழக மக்களுக்கு உடனடியாக உறுதியும் உத்திரவாதமும் அளிக்க வேண்டும். இல்லையேல் பாமர மக்களை வதைக்கும் அதிகார துஷ்பிரயோக ஸ்டாலின் தலைமையிலான இந்த அராஜக அரசுக்கு வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், தமிழக வரலாற்றில் தி.மு.க., நினைத்துக்கூடப் பார்க்க முடியாத தோல்வியை மக்கள் பரிசாக அளிப்பார்கள் என்பதை எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அஜித்குமாரிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டது யார்? டிஜிபி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 1, ஜூலை 2025 4:02:21 PM (IST)

சிவகங்கை எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்: மானாமதுரை டி.எஸ்.பி. சஸ்பெண்ட்!
செவ்வாய் 1, ஜூலை 2025 3:43:56 PM (IST)

அஜித்குமாரை பிரம்பால் கொடூரமாக தாக்கும் போலீசார் : அதிர்ச்சி வீடியோ வெளியானது!
செவ்வாய் 1, ஜூலை 2025 3:23:07 PM (IST)

நள்ளிரவில் மின்சாரக் கட்டணத்தை 3.16% உயர்த்திய தமிழக அரசு: அன்புமணி கண்டனம்
செவ்வாய் 1, ஜூலை 2025 3:17:21 PM (IST)

அஜித்குமார் மரண வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
செவ்வாய் 1, ஜூலை 2025 12:06:46 PM (IST)

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 7பேர் உயிரிழப்பு
செவ்வாய் 1, ஜூலை 2025 11:59:03 AM (IST)

srinivasanJul 1, 2025 - 10:59:26 AM | Posted IP 104.2*****