» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எல்லோருக்கும் எல்லாம் என்ற உயரிய நோக்கில் அரசு செயல்படுகிறது: அமைச்சர் மனோ தங்கராஜ்

செவ்வாய் 8, ஜூலை 2025 4:56:47 PM (IST)



எல்லோருக்கும் எல்லாம் என்ற உயரிய நோக்கில் தமிழ்நாடு அரசு செயல்படுகிறது என்று பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் பேசினார.

கன்னியாகுமரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். 

விழாவில் அவர் பேசுகையில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து தமிழ்நாட்டிற்குட்பட்ட அனைத்து தரப்பட்ட குறிப்பாக கடைகோடி வரை இருக்கும் கிராம மக்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள், நலத்திட்ட உதவிகள், வளர்ச்சி திட்டப்பணிகளை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் சிறுபான்மையினருக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை நம் முதல்வர் வழங்கி வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக தான் இந்த விழா நடந்து கொண்டிருக்கிறது. நமது மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் நீண்ட காலமாக பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இந்த நான்காண்டு காலத்தில் பல்வேறு பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக நமது மாவட்டத்தில் காலம் காலமாக குடியிருந்து வரும் பட்டா கிடைக்காத 14,000 மேற்பட்ட மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஏழை எளிய தாய்மார்களுக்கு பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, பெண்களுக்கான திறன் பயிற்சி வழங்கி வேலை வாய்ப்புகள் இப்படி அடுக்கிக் கொண்டே போகும் அளவிற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள் நம்முடைய முதல்வர். 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பிற்படுத்தப்பட்டவர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும், சிறுபான்மையின மக்களும், பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிட மக்களும் உயர வேண்டும் என்ற நோக்கில் தான் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தான் சாதாரண பொறுப்புகள் முதல் உயர் பொறுப்புகள் வரை பிற்படுத்தப்பட்ட மக்கள் உள்ளனர். மேலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 20% இட ஒதுக்கீடும், பட்டியல் இன சமூக மக்களுக்கு 18 சதவீத இட ஒதுக்கீடும் பழங்குடி மக்களுக்கு ஒரு சதவீத இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் முஸ்லிம்களின் கோரிக்கையை ஏற்று 2007 ஆம் ஆண்டு 3.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்கினார்கள். அதன் விளைவாகத்தான் இஸ்லாமிய சகோதரர்கள் பலர் பல வாய்ப்புகளைப் பெற்று அரசு பணி உள்ளிட்டவைகளில் உள்ளார்கள். சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக நம்முடைய தமிழ்நாடு அரசானது திகழ்ந்து வருகிறது. 

நமது மாவட்டம் பல சமூக மக்கள் வாழக்கூடிய பகுதியாக இருந்தாலும் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை பெற்றிருக்கிறோம். நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் சமதர்ம சமுதாயத்தை உருவாக்க வேண்டும் அதன் வாயிலாக தான் விளிம்பு நிலை மக்களை உயர்த்த வேண்டும். எல்லோருக்கும் எல்லாம் என்கின்ற அற்புதமான தத்துவத்தினை திரும்ப திரும்ப சொல்லி வருகிறார்கள்.

அந்தவகையில் இன்று பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. ஏழ்மை நிலையிலுள்ள சிறுபான்மையின பயனாளிகளுக்கு இலவசமாக ஆண்டுத்தொறும் மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம் வழங்கப்பட்டு வருகிறது. தையல் இயந்திரம் கோரி வரப்பட்ட மனுக்களில் முன்னுரிமை பட்டியலில் உள்ள பயனாளிகளுக்கு, நான் முதல்வன் திட்டத்தின் மூலம் (TNSDC) 15 நாட்கள் பயிற்சி அளித்து, தேர்வில் தேர்ச்சி அடைந்த 28 சிறுபான்மையின பயனாளிகளுக்கு தலா ரூ.5,600/- மதிப்புள்ள மின் மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. 

அதேபோன்று 47 பிற்படுத்தப்பட்டோர் பயனாளிகளுக்கு ரூ.5,640/- மதிப்புள்ள இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து முஸ்லீம் மகளிர் உதவும் சங்கங்கள் 2007 ஆம் ஆண்டு அரசால் ஏற்படுத்தப்பட்டன. 01.04.2012 முதல் சங்கங்கள் திரட்டும் நன்கொடைத் தொகைக்கு இணை மானியம் 1:2 என்ற விகிதாச்சாரத்தில் இரட்டிப்பாக ஒவ்வொரு சங்கத்திற்கும் அதிகபட்சமாக ஆண்டிற்கு ரூ.20 இலட்சம் வரை அரசால் வழங்கப்பட்டு வருகிறது. 

இச்சங்கங்களின் நிதி ஆதாரங்களின் மூலம் ஆதரவற்ற, வயது முதிர்ந்த முஸ்லீம் விதவைகள் மற்றும் மிகவும் ஏழ்மை நிலையில் வாழும் முஸ்லிம் மகளிர் ஆகியோர்களுக்கு உதவிடும் வகையில் நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கன்னியாகுமரி மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தின் சார்பாக, 320 முஸ்லீம் மகளிருக்கு தலா ரூ.10,000/- வீதம் மொத்தம் ரூ.32 இலட்சம் வழங்கலாம் என 01.07.2025 அன்று நடைபெற்ற பொதுக்குழுவில் சங்க உறுப்பினர்களால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுக்குழு தீர்மானத்தின்படி இன்றைய தினம் சிறுதொழில் தொடங்க 107 முஸ்லீம் மகளிர்க்கு ரூ.10.70 இலட்சம் மதிப்பில் நிதியுதவியும், தையல் தொழில் செய்வதற்கு 13 முஸ்லீம் மகளிர்க்கு ரூ.1.30 இலட்சம் மதிப்பில் நிதியுதவியும், மாவு விற்பனை தொழில் துவங்குவதற்கு 157 முஸ்லீம் மகளிர்க்கு ரூ.15.70 இலட்சம் மதிப்பில் நிதியுதவியும், சமையல் தொழில் செய்ய 32 முஸ்லீம் மகளிர்க்கு ரூ.3.20 இலட்சம் மதிப்பில் நிதியுதவியும், மருத்துவ உதவிக்கு 8 முஸ்லீம் மகளிர்க்கு ரூ.80,000மும், கல்வி உதவித்தொகை 3 முஸ்லீம் மகளிர்க்கு ரூ.30,000 என 320 செய்யப்பட்ட முஸ்லீம் மகளிர் பயனாளிகளுக்கு ரூ.32 இலட்சம் மதிப்பில் என மொத்தம் 395 பயனாளிக்கு ரூ.36.21 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் நீங்கள் அனைவரும் அரசின் பல்வேறு திட்டங்களில் இணைந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். தொடர்ந்து நடைபெறவுள்ள உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் கலந்து கொண்டு உங்களுக்கு தேவையான கோரிக்கைகளுக்கு விண்ணப்பித்து பயன்படுவதோடு, நடைபெறவுள்ள மருத்துவமுகாமில் கலந்துகொண்டு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் இணைந்து பயனடையும் படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் தலைவர் என்.சுரேஷ்ராஜன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் து.செந்தூர் ராஜன், நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, முஸ்லீம் மகளிர் உதவும் சங்க செயலாளர் மாலுக் முகம்மது, வழக்கறிஞர் ஹிமாதுதின், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலக கண்காணிப்பாளர் சுந்தர், துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory