» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விலங்குலகத்தில் இடையூறு செய்தால் சமநிலை பாதிப்படையும் : ஆட்சியர் க.இளம்பகவத்

புதன் 8, அக்டோபர் 2025 4:09:06 PM (IST)



விலங்குலகத்தில் ஒரு உயிரினத்தை இடையூறு செய்து, அதன் எண்ணிக்கையை அதிகமாகவோ அல்லது குறைந்தாலோ இயற்கை சமநிலை பாதிப்படைந்து மக்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் பேசினார். 

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் இன்று (08.10.2025), வனத்துறை சார்பில் நடைபெற்ற வன உயிரின வார விழாவில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், கலந்துகொண்டு சிறப்புரையாற்றி, வன உயிரின வார விழா 2025 முன்னிட்டு மனித - வன உயிரின இணைந்து வாழ்தல் என்ற தலைப்பில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்ததாவது : வன உயிரின வார விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக இன்றையதினம் மாணவர்களுக்கான இயற்கை நடை பயணம் மற்றும் போட்டிகளுக்கான பரிசளிப்பு விழாவை ஏற்பாடு செய்து, பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை வென்றிருக்கக்கூடிய மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது இனிய காலை வணக்கம். 

இந்நிகழ்ச்சியின் வாயிலாக மாணவர்களுக்கு வன உயிர்கள் தொடர்பாக பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. செவிக்கு உணவில்லாத பொழுது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என கூறப்படும். குறிப்பாக வன உயிரின வார விழா தொடர்பாக நடைபெற்ற போட்டிகள் எல்லாம் நீங்கள் எந்த அளவிற்கு வன உயிர்களை குறித்து தெரிந்து கொண்டீர்கள், எந்த அளவிற்கு அது குறித்த புரிதல் உருவாகி இருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். 

குறிப்பாக வௌவால் வீட்டுக்கு வந்தால் அது ஆகாது என்று சொல்லி நாம் மூடநம்பிக்கையில் இருக்கிறோம். ஆகவே, வௌவால், எறும்பு உள்ளிட்ட உயிரினங்களும் நல்லது தான். மேலும், கரையான் கெட்டுப் போன மரங்கள், இலை தழைகளை எல்லாம் சிதைத்து ஒரு விதமாக மாற்றி கொடுப்பதினால் தான் மக்குகின்றது. கரையான் இல்லையென்றால் காடுகள் எல்லாம் குப்பை குவியலாக மாறிவிடும். காடுகள் உருவாகி இருக்காது மற்றும் மரங்கள் செழித்து வளர்ந்திருக்காது. மேலும், ஆந்தை இல்லையென்றால் எலிகள் பெருகிவிடும். எலி விவசாய நிலத்தை எல்லாம் அழித்துவிடும். மேலும் பாம்புகள் இல்லையென்றால் எலி, தவளை உள்ளிட்டவை பெருகி, பாதிப்பினை ஏற்படுத்தும். 

மான்களை எல்லாம் பாதுகாப்பதற்காக இங்கு மான்கள் சரணாலயம் வைக்கப்பட்டுள்ளது. கடைசி கணக்கெடுப்பின்படி இந்த காட்டில் 300 மான்கள் உள்ளன. மான்கள் அதிகமாக பெருகுகின்ற பொழுது அது சாப்பிடுவதற்கான புல் மற்றும் இலை தழைகள் அதிகமாக இருக்காது. சிறுத்தை, நரி, மலைப்பாம்பு உள்ளிட்ட விலங்குகள் மான்களை வேட்டையாடுவதால் தான் மான்கள் குறிபிட்ட அளவில் இருக்கின்றது. காடுகளில் உள்ள மான்களின் எண்ணிக்கை அதிகமாகின்ற பொழுது அது விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை எல்லாம் சாப்பிட தொடங்குகின்றது. இயற்கையில் வாழக்கூடிய உயிரினங்களுக்கு அது வாழ்கிறதற்கான இடமும், வாழ்கிறதற்கான உரிமையும் இருக்கிறது. 

எனவே, மனிதர்கள் அதனை இடையூறு செய்யக்கூடாது. அவ்வாறு இடையூறு செய்கின்ற பொழுது இயற்கையில் உள்ள விலங்கினங்கள் அதிகமாக பெருகி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும். இயற்கை என்பது அருமையான சமநிலையுடன் இருக்கின்றது. மனிதனும் இந்த விலங்குலகத்தில் ஒரு சிறு பகுதியாக உள்ளதால் இயற்கையின் சமநிலையை சீர்குலைக்க கூடாது. விலங்குலகத்தில் பாக்டீரியாவில் தொடங்கி இலட்சகணக்கான விலங்குகள் உள்ளன. ஆகவே, இந்த விலங்குலகத்தில் ஒரு உயிரினத்தை இடையூறு செய்து, அதன் எண்ணிக்கையை அதிகமாகவோ அல்லது குறைந்தாலோ இயற்கை சமநிலை பாதிப்படைந்து மக்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும். 

மனிதனும், விலங்குகளும் மற்றும் அனைத்து உயிரினங்களும் அதிகமாக பெருகாமல், குறிப்பிட்ட சமநிலையுடன் இருக்கின்ற பொழுது எந்தவொரு சிக்கலும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆகவே, இந்த வருடத்திற்கான வன உயிரின வார விழாவானது மனித - வன உயிரினங்கள் இணைந்து வாழ்தல் என்ற கருப்பொருளின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது. 

இந்நிகழ்ச்சியின் வாயிலாக அனைத்து உயிரினங்களும் நல்லது என்பதை புரிந்து கொண்டு, அனைவருக்கும் எடுத்துக் கூற வேண்டும். யாவரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் நலமாகும். இல்லாத இடத்திற்கு சென்று இடையூறு செய்தால் அது பிரச்சனையாகும். மிகச்சிறப்பான இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்தார்கள். இந்நிகழ்வில் மாவட்ட வன அலுவலர் இளையராஜா, இ.வ.ப., வனச்சரக மற்றும் வனத்துறை அலுவலர்கள், மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory