» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பீகாரில் முதல்கட்டத் தோ்தல் தொடங்கியது : 121 தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு!
வியாழன் 6, நவம்பர் 2025 10:34:53 AM (IST)

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் கட்டமாக 121 தொகுதிகளில் இன்று (நவ. 6) காலை வாக்குப் பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் பேரவைக்கு இருகட்டங்களாக பேரவைத் தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக 18 மாவட்டங்களில் அடங்கிய 121 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. முதல்கட்டத் தேர்தலில் மொத்த வேட்பாளர்கள் 1,314. இவர்களின் வெற்றி-தோல்வியை 3.75 கோடி வாக்காளர் நிர்ணயிக்க உள்ளனர். 10.72 லட்சம் பேர் முதல்முறை வாக்காளராவர். மொத்தம் 45,341 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
குர்ஹானி, முஸாஃபர்பூர் தொகுதிகளில் அதிகபட்சமாக தலா 20 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். போரே, அலௌலி (தனித் தொகுதிகள்) மற்றும் பர்பட்டாவில் குறைந்தபட்சமாக தலா 5 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். முதல்கட்டத் தேர்தல் நடைபெறும் 121 தொகுதிகளில் மொத்த மக்கள்தொகை 6.60 கோடியாகும்.
மோதும் தே.ஜ.-இண்டி கூட்டணிகள்: பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்), ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா ஆகிய 5 கட்சிகள் அடங்கிய ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ், விகாஸ்ஷீல் இன்சான் கட்சி, இடதுசாரிகளின் ‘இண்டி’ கூட்டணிக்கும் இடையே முக்கியப் போட்டி நிலவுகிறது. தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் தேர்தல் களத்தில் உள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக பிரதமர் மோடி, முதல்வர் நிதீஷ் குமார், மத்திய அமைச்சர்களும், இண்டி கூட்டணி தரப்பில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஆர்ஜேடி தலைவரும் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோரும் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.
நவ.11-இல் இரண்டாம்கட்டம்: மீதமுள்ள 122 தொகுதிகளுக்கு இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக நவ.11-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. நவ. 14-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
முக்கிய வேட்பாளர்கள்-தொகுதிகள்
முதல்கட்டத் தேர்தலில், ரகோபூர் தொகுதியில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் தொடர்ந்து மூன்றாவது முறையாக களத்தில் உள்ளார். அவரை எதிர்த்து பாஜகவின் சதீஷ் குமார், ஜன் சுராஜின் சஞ்சல் சிங் போட்டியிடுகின்றனர். கடந்த 2010-இல் இத்தொகுதியில் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் களமிறங்கிய சதீஷ் குமார், தேஜஸ்வியின் தாயார் ராப்ரி தேவியை தோற்கடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ம{ஹவா தொகுதியில் தற்போதைய ஆர்ஜேடி எம்எல்ஏ முகேஷ் ரௌஷனுக்கு எதிராக தேஜஸ்வியின் சகோதரரும் ஜனசக்தி ஜனதா தளம் கட்சித் தலைவருமான தேஜ் பிரதாப் களத்தில் உள்ளார்.
பாஜகவைச் சேர்ந்த துணை முதல்வர்கள் சாம்ராட் சௌதரி (தாராபூர்), விஜய் குமார் சின்ஹா (லகிசராய்), நிதீஷ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் ஷரவண் குமார் (நாளந்தா), விஜய் குமார் சௌதரி (சராய்ரஞ்சன்) உள்ளிட்டோரும் முதல்கட்டத் தேர்தல் களத்தில் உள்ளனர். தாதாவாக இருந்து அரசியல்வாதியான முகமது சகாபுதீனின் மகன் ஒசாமா சாகேப் (ஆர்ஜேடி) போட்டியிடும் ரகுநாத்பூர் தொகுதியும் கவனம் பெற்றுள்ளது.
தேர்தலைப் பார்வையிடும் 7 நாடுகளின் பிரதிநிதிகள்: இந்திய தேர்தல் ஆணையத்தின் சர்வதேச பார்வையாளர்கள் திட்டத்தின்கீழ், பீகார் முதல்கட்டப் பேரவைத் தேர்தலை 7 நாடுகளின் (பிரான்ஸ், தென்னாப்பிரிக்கா, பெல்ஜியம், இந்தோனேசியா, பிலிப்பின்ஸ், தாய்லாந்து, கொலம்பியா) 14 பிரதிநிதிகள் பார்வையிட உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குரூப்-1, குரூப்-2 உள்ளிட்ட வருடாந்திர தேர்வு அட்டவணை விரைவில் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி
வியாழன் 6, நவம்பர் 2025 12:17:30 PM (IST)

விஜய் நிதானம் இழக்காமல் அரசியல் நாகரிகத்தை கடைபிடிக்க வேண்டும்: வைகோ அறிக்கை!
வியாழன் 6, நவம்பர் 2025 12:06:44 PM (IST)

கழகத்தை காக்க சின்னம்மாவை அழைத்து வாருங்கள் : நாகர்கோவிலில் பரபரப்பு போஸ்டர்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:02:51 AM (IST)

சென்னையில் ரூ.2 ¼ லட்சத்துக்கு பெண் குழந்தை விற்பனை: பெற்றோர் உள்பட 6 பேர் கைது
வியாழன் 6, நவம்பர் 2025 10:24:54 AM (IST)

தமிழகத்தில் 218 விஏஓக்கள் நேரடி நியமனத்துக்கு இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
புதன் 5, நவம்பர் 2025 5:21:10 PM (IST)

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
புதன் 5, நவம்பர் 2025 4:08:28 PM (IST)




