» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மக்களின் தீர்ப்பை கொச்சைப்படுத்தக் கூடாது : ஸ்ரீநாத் எம்எல்ஏ பரபரப்பு அறிக்கை!
ஞாயிறு 17, மே 2026 9:58:14 AM (IST)
தேர்தல் தோல்வி விரக்தியில் தூத்துக்குடி மக்களைப் பொதுவெளியில் குற்றம் சாட்டுவதையோ, அவர்களின் ஜனநாயக உரிமையைக் கொச்சைப் படுத்துவதையோ எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தூத்துக்குடி தொகுதியின் புதிய சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் "நேற்று சமூக வலைதளங்களில் முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சகோதரி திருமதி கீதா ஜீவன் அவர்களின் பதிவு ஒன்றைக் கண்டேன். அதில், தூத்துக்குடி மக்களுக்கு ஏதோ அரசியல் சிந்தனையே இல்லாதது போலவும், மக்களெல்லாம் முட்டாள்கள் என்பது போலவும் அவர் சித்தரித்துள்ளார்.தான் செய்த பணிக்கு மக்கள் தனக்கு வாக்கு அளிக்கவில்லை என அவர் விரக்தியின் உச்சத்தில் புலம்பி இருப்பதைப் பார்த்து நான் பெரும் அதிர்ச்சி அடைந்தேன். இரண்டு முறை தமிழக அமைச்சராக இருந்த ஒரு பொறுப்பான சகோதரி, பொதுவெளியில் வாக்களித்த சொந்த மக்களையே குற்றம் சாட்டுவது கண்டிக்கத்தக்கது.
ஜனநாயகம் என்பது மக்கள் தங்களுக்கு யாரை விரும்புகிறார்களோ, அவர்களைத் தேர்ந்தெடுக்கும் முழுமையான உரிமையைக் கொடுத்துள்ளது. அதன் அடிப்படையில் தான் தூத்துக்குடி மக்கள் என்னைத் தங்களது சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட ஜனநாயகப்படி என்ன தகுதி வேண்டுமோ, அத்தனை தகுதிகளும் என்னிடம் இருக்கிறது; அதனால்தான் மக்கள் எனக்கு இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர்.
ஆனால், எனது திறமை என்ன, மக்கள் நலனில் எனது பணி என்ன என்பதை இன்னும் அளவிடக் கூடத் தொடங்காமல், போகிற போக்கில் சேற்றை வாரி இறைப்பது போல் மக்கள் மீதும், என் மீதும் குற்றச்சாட்டைச் சுமத்துவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் "மீண்டும் சகோதரி கீதா ஜீவன் அவர்களையே மக்கள் தேர்ந்தெடுப்பார்கள், அதன் மூலம் தனக்கு வேண்டிய காரியங்களைச் செய்துகொள்ளலாம் என்று நினைத்திருந்த சில சக்திகளுக்குத் தூத்துக்குடி மக்களின் இந்தத் தீர்ப்பு மிகப்பெரிய அதிர்ச்சியைத் தந்துள்ளது. மக்களின் இந்த நம்பிக்கையை வீணடிக்காமல், தூத்துக்குடி தொகுதிக்குரிய மக்கள் பணிகளைச் மிகச் சிறப்பாகச் செய்து அதை நான் களத்தில் நிரூபிப்பேன் என்பதைத் தெளிவாகக் கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
இருப்பினும், அன்புச் சகோதரி திருமதி கீதா ஜீவன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்" என அறிக்கையில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்றுள்ள சூழலில், தூத்துக்குடி மண்ணில் முன்னாள் அமைச்சருக்கும், தற்போதைய புதிய சட்டமன்ற உறுப்பினருக்கும் இடையே வெடித்துள்ள இந்த நேரடி 'அறிக்கை போர்' உள்ளூர் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காதலன் கண்முன்னே கொடூரம்: கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த 3 பேருக்கு 30 ஆண்டுகள் சிறை!
ஞாயிறு 17, மே 2026 11:04:00 AM (IST)

தூத்துக்குடியில் வரத்து குறைவால் மீன்கள் விலை உயர்வு : ஒரு கிலோ ரூ.1,600-க்கு விற்பனை!
ஞாயிறு 17, மே 2026 8:47:41 AM (IST)

பிரபல வணிக நிறுவனங்களில் போலி ஆல் அவுட் திரவப் பாட்டில்கள் பறிமுதல்: தூத்துக்குடியில் பரபரப்பு!
ஞாயிறு 17, மே 2026 8:05:01 AM (IST)

நாகர்கோவில் அருகே நகைக்கடையில் கொள்ளையடித்த 2 பேர் கைது: மேலும் மூவருக்கு போலீஸ் வலைவீச்சு
சனி 16, மே 2026 9:02:22 PM (IST)

திருச்சி கிழக்கில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும்: திருச்செந்தூர் தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்
சனி 16, மே 2026 8:00:33 PM (IST)

வீட்டின் பால்கனியில் கஞ்சா செடி வளர்த்த தவெக ஆதரவாளர் கைது: சென்னையில் பரபரப்பு!
சனி 16, மே 2026 5:50:47 PM (IST)



பிரபுமே 17, 2026 - 10:16:58 AM | Posted IP 172.7*****