» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
காதலன் கண்முன்னே கொடூரம்: கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த 3 பேருக்கு 30 ஆண்டுகள் சிறை!
ஞாயிறு 17, மே 2026 11:04:00 AM (IST)

டற்கரையில் காதல் ஜோடியை ஆயுதங்களைக் காட்டி மிரட்டி, காதலன் கண்முன்னே காதலியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளிகளான 3 வாலிபர்களுக்குத் தலா 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 24 வயது வாலிபர் ஒருவரும், இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி, இந்த காதல் ஜோடி ராமநாதபுரம் மாவட்டம் வாலினோக்கத்திற்குச் சென்றுவிட்டு, பின்னர் மூக்கையூர் கடற்கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த ராமநாதபுரம் கமுதியைச் சேர்ந்த பத்மாஸ்வரன் (26), பசும்பொன் கிழக்குத் தெருவைச் சேர்ந்த அஜித்குமார் (22) மற்றும் விருதுநகர் நத்தகுளத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் (26) ஆகிய 3 பேரும் காதல் ஜோடியை ஆயுதங்களைக் காட்டி மிரட்டியுள்ளனர். தங்களுடன் வந்த 17 வயது சிறுவன் ஒருவனைப் பாதுகாப்புக்கு நோட்டமிட வைத்துவிட்டு, காதல் ஜோடியைச் சீமைக் கருவேல மரக்காட்டிற்குள் பலவந்தமாக இழுத்துச் சென்றுள்ளனர்.
காட்டுப் பகுதிக்குள் சென்றதும் காதலியின் துப்பட்டாவைக் கொண்டே காதலனை மரத்தில் கட்டிப்போட்டுள்ளனர். பின்னர் காதலனின் கண் எதிரிலேயே அந்த இளம்பெண்ணை 3 பேரும் சேர்ந்து கொடூரமாகக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், இருவரையும் சரமாரியாகத் தாக்கி, அவர்கள் அணிந்திருந்த 6 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் பணத்தைப் பறித்துக் கொண்டு, வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டிவிட்டுத் தப்பியோடினர்.
இந்தக் கொடூரச் சம்பவத்தால் பேரதிர்ச்சியும், மன உளைச்சலும் அடைந்த காதல் ஜோடி, வெளியில் சொல்ல அஞ்சி தங்களது ஊருக்குத் திரும்பினர். எனினும், ஏற்பட்ட அவமானத்தைத் தாங்க முடியாமல் இருவரும் விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதுதான், காதலன் நடந்த கொடூரத்தை மருத்துவரிடமும் போலீசாரிடமும் வாக்குமூலமாக அளித்தார்.
இச்சம்பவம் அப்போது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதால், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் சாயல்குடி போலீசார் தனிப்படை அமைத்துத் தேடினர். இதில் முதன்மைக் குற்றவாளியான பத்மாஸ்வரனைப் பிடிக்க முயன்றபோது, அவர் சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணனை அரிவாளால் வெட்டியுள்ளார். எனினும், போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து 3 வாலிபர்கள் மற்றும் அவர்களுக்கு உதவிய சிறுவனைக் கைது செய்தனர். மேலும், மகனின் குற்றத்தை அறிந்து அவர் திருடி வந்த நகைகளைப் பதுக்கி வைத்திருந்த பத்மாஸ்வரனின் தாய் வில்லம்மாளும் (50) கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு ராமநாதபுரம் மாவட்ட விரைவு மகிளா நீதிமன்றத்தில் தீவிரமாக நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி கவிதா அவர்கள் நேற்று பரபரப்புத் தீர்ப்பை வழங்கினார். அதன்படி, குற்றவாளிகளான பத்மாஸ்வரன், தினேஷ்குமார், அஜித்குமார் ஆகிய 3 பேருக்கும் தலா 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.60,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.
மேலும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளைப் பெற்று மறைத்து வைத்திருந்த குற்றத்திற்காகப் பத்மாஸ்வரனின் தாய் வில்லம்மாளுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கீதா ஆஜராகி வாதாடினார்.
இக்கொடூரச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த 17 வயது சிறுவன் மீதான வழக்கு ராமநாதபுரம் இளைஞர் நீதிக் குழுமத்தில் தனியாக நடந்து வருகிறது. அதேபோல, கைது செய்யச் சென்ற சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணனை வெட்டிப் படுகொலை செய்ய முயன்றதற்காகப் பத்மாஸ்வரன் மீது ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் மற்றொரு தனி வழக்கு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மே 10 முதல் 200 யூனிட் இலவச மின்சாரம் கணக்கீடு: ஆட்டோ-டெபிட் வசதியும் அறிமுகம்!
ஞாயிறு 17, மே 2026 11:42:15 AM (IST)

குருவாயூர் எக்ஸ்பிரஸில் நகை வியாபாரியிடம் 1½ கிலோ தங்க நகைகள் கொள்ளை!
ஞாயிறு 17, மே 2026 11:33:58 AM (IST)

மக்களின் தீர்ப்பை கொச்சைப்படுத்தக் கூடாது : ஸ்ரீநாத் எம்எல்ஏ பரபரப்பு அறிக்கை!
ஞாயிறு 17, மே 2026 9:58:14 AM (IST)

தூத்துக்குடியில் வரத்து குறைவால் மீன்கள் விலை உயர்வு : ஒரு கிலோ ரூ.1,600-க்கு விற்பனை!
ஞாயிறு 17, மே 2026 8:47:41 AM (IST)

பிரபல வணிக நிறுவனங்களில் போலி ஆல் அவுட் திரவப் பாட்டில்கள் பறிமுதல்: தூத்துக்குடியில் பரபரப்பு!
ஞாயிறு 17, மே 2026 8:05:01 AM (IST)

நாகர்கோவில் அருகே நகைக்கடையில் கொள்ளையடித்த 2 பேர் கைது: மேலும் மூவருக்கு போலீஸ் வலைவீச்சு
சனி 16, மே 2026 9:02:22 PM (IST)


