» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அய்யா வைகுண்டரை அவமதித்த டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்திற்கு சரத்குமார் கண்டனம்

செவ்வாய் 2, செப்டம்பர் 2025 11:44:16 AM (IST)

அய்யா வைகுண்டரை அவமதித்த டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்திற்கு நடிகர் சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் இளநிலை உதவி வரைவாளர் பணிக்கான தேர்வு நடைபெற்றதில், வைகுண்ட சுவாமிகளின் கூற்றில் சரியானவற்றை தேர்வுசெய்க என கேட்கப்பட்ட கேள்விக்காக கொடுக்கப்பட்ட விடையில், முடிசூடும் பெருமாள் என்றும் முத்துக்குட்டி என்றும் அழைக்கப்பட்டார் என்ற பதிலை ஆங்கிலத்தில் "the god of hair cutting" என்று குறிப்பிடப்பட்டிருந்தது அதிர்ச்சியளிக்கிறது.

வளர்ச்சி, வளர்ச்சி என்று தமிழக அரசு பெருமை பேசும் சூழலில், தமிழ்நாட்டின் முதன்மை அதிகாரிகளையும், அறிவார்ந்த, திறன்வாய்ந்தவர்களை தேர்வு செய்யும் TNPSC தேர்வு நடைமுறையில், பல்வேறு குளறுபடிகளால் அதுவும் எளிய மொழிமாற்றம் கூட செய்வதறியாமல் தவறுதலாக கேள்வி உருவாக்கி இருக்கிறார்கள் என்று சொன்னால், TNPSC தேர்வாணையத்தின் தரத்தின் மீது நம்பிக்கையற்ற மனநிலை ஏற்படுகிறது.

தென் மாவட்ட மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் அய்யா வைகுண்டர் வழியை பின்பற்றும் லட்சக்கணக்கான மக்களின் மனதை இச்செயல் புண்படுத்தியிருக்கிறது. இறைவனை பற்றிய கேள்வியில் ஒரு சரியான விடையும், பல தவறான விடையும் கொடுக்கப்பட்டு இழிவுபடுத்தி உள்ளது மேலும் கண்டனத்திற்குரியது.

தேர்வு தாமதங்கள், முடிவு தாமதங்கள், தேர்வு வினாத்தாள் கசிவு, முறையற்ற தேர்வு நடைமுறைகள் என பல்வேறு குளறுபடிகள் TNPSC - இல் அரங்கேறி வருவது இது முதன்முறை அல்ல, பலமுறை இதுபோன்ற தவறுகள் நேர்ந்திருக்கிறது. உதாரணத்திற்கு முந்தைய குரூப் - 1 தேர்வில் கிறிஸ்துவின் வருகையை அறிவித்த முன்னோடி யார் என்ற கேள்வி கேட்கப்பட்டு, அதற்கு 1.அருளப்பன் 2. யோவான் 3. சந்தாசாகிப் 4. சந்நியாசி என பதில் அளித்தும், தேம்பாவணியின் பாட்டுடை தலைவன் யார் என்று கேட்டு அதில் இயேசு, மரியாள், மற்றும் யூதாஸ் பெயர்கள் பதிலுக்கான ஆப்ஷனாக கொடுக்கப்பட்டு சர்ச்சைக்குள்ளாகியது.

தொடரும் இந்த TNPSC குளறுபடி பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு தீர்த்து வைக்க மறுக்கிறது. இந்த அவலங்கள் குறித்த தவறை ஒப்புக்கொண்டு TNPSC மன்னிப்பு கோர வேண்டும் எனவும், இனி இதுபோன்ற குளறுபடி நடைபெறாமல் கூடுதல் கவனத்துடன் செயல்பட வலியுறுத்துகிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory