» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அமைச்சர் ஆனந்த் மீது வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் ஞானசவுந்தரி த.வெ.க-விலிருந்து நீக்கம்!

சனி 18, ஜூலை 2026 11:29:22 AM (IST)

cmvijayAnandGnanasound.jpg

அமைச்சர் ஆனந்த் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் ஞானசவுந்தரி தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளராக இருந்த ஞானசவுந்தரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது: "தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் மோகன்ராஜின் அறிவுறுத்தலின் பேரில், மகளிர் நீதிமன்ற அரசு சிறப்பு வழக்கறிஞர் பணிக்கும், மாவட்ட முதன்மை மற்றும் சார்பு நீதிமன்றங்களின் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பணிக்கும் நான் விண்ணப்பித்திருந்தேன்.

தமிழக அரசு கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், வழக்கறிஞர் பணிகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 29 மாலை கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அன்றைய தினம் மாலையிலேயே சமூக வலைத்தளங்களில் (WhatsApp) பணி நியமனப் பட்டியல் என்று ஒரு தகவல் பரவியது."

இது குறித்து மாவட்டச் செயலாளரிடம் விசாரித்தபோது, அதுதான் இறுதிப் பட்டியல் என்று அவர் கூறியதாக ஞானசவுந்தரி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், "அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு ₹5 லட்சம் முதல் ₹30 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டுள்ளது. 

மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த வழக்கறிஞர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு, அமைச்சர் ஆனந்தின் பரிந்துரையின் பேரில் அவர்கள் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, இதற்குப் பொறுப்பேற்று முதல்வர் விஜய் அவர்கள் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை இந்த அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்குத் தடை விதிக்க வேண்டும்" என்றும் அவர் கோரியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் சேர்க்கப்பட்டிருந்த முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோரின் பெயர்களை வழக்கிலிருந்து நீக்குமாறு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

கட்சியை விட்டு நீக்கம் 

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, அமைச்சர் ஆனந்த் மீது வழக்குப் தொடர்ந்த ஞானசவுந்தரி த.வெ.க-விலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழக வெற்றிக் கழகத்தின் இணையவழி (Online) உறுப்பினர் மூலமாகத் தங்களை இணைத்துக் கொண்ட சந்திரமோகன் என்பவரின் மனைவி திருமதி M. ஞானசவுந்தரி (MS.No.4063/2015), எதிரிகளுடன் சேர்ந்துகொண்டு கட்சிக்கு எதிராகப் பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி வந்துள்ளார்.

கட்சியின் கொள்கைகள், ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு முரணாகச் செயல்பட்டதால், அவர் தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்படுகிறார்.    கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் யாரும் இன்றிலிருந்து அவருடன் கட்சி ரீதியாக எவ்விதத் தொடர்போ அல்லது ஒத்துழைப்போ வைத்துக்கொள்ளக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மற்றும் கட்சித் தலைமைக்கு எதிராகச் செயல்பட்ட த.வெ.க பிரமுகர் ஒருவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory