» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
போப் பிரான்சிஸ் மறைவையொட்டி 2 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 10:17:04 AM (IST)

போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி, தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் (ஏப்.22, 23) துக்கம் அனுசரிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர், போப் ஆண்டவர். கத்தோலிக்க திருச்சபையின் இந்த உச்சபட்ச பதவியில் போப் பிரான்சிஸ் இருந்து வந்தார். அர்ஜென்டினாவை சேர்ந்த இவர் கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் 13-ந் தேதி போப் ஆண்டவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
12 ஆண்டுகளாக இந்த பதவியில் இருந்த அவருக்கு முதுமை காரணமாக கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்தது. பின்னர் சுவாசக்கோளாறு காரணமாக கடந்த பிப்ரவரி 14-ந் தேதி இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடந்த பரிசோதனையில் நிமோனியா பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதற்காக தீவிர சிகிச்சை பெற்ற அவர் 38 நாட்களுக்குப்பின் மருத்துமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.
பின்னர் தனது பெரும்பாலான பணிகளை குறைத்துக்கொண்டு ஓய்வில் இருந்தார். வாடிகனில் சமீபத்தில் நடந்த புனித வியாழன், புனித வெள்ளி மற்றும் உயிர்ப்பு பெருவிழா பிரார்த்தனைகளிலும் பங்கேற்றார். குறிப்பாக ஈஸ்டர் பிரார்த்தனையில் பங்கேற்ற மக்களுக்கு அவர் வாழ்த்துகளையும் தெரிவித்து இருந்தார்.
அவருக்கு நேற்று காலையில் திடீரென உடல்நிலை மோசம் அடைந்தது. டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 88.அவரது மரணத்தை வாடிகன் உறுதி செய்தது.
போப் ஆண்டவர் மறைவுக்கு உலக நாடுகள் இரங்கல் வெளியிட்டு வருகின்றன. இதன்படி போப் பிரான்சிஸ் மறைவுக்கு இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. துக்கம் அனுசரிக்கப்படும் நாட்களில் நாடு முழுவதும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கும், அரசு நிகழ்ச்சிகள் நடைபெறாது என்றும் கூறி இருந்தது.
இந்நிலையில் போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி, இன்றும் (22-04-2025), நாளையும் (23-04-2025) துக்கம் அனுசரிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் ஏப்ரல் 21, 2025 அன்று காலமானார், மறைந்த அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இந்தியா முழுவதும் மூன்று நாட்கள் மாநிலங்கள் சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
இதன்படி இன்றும் (செவ்வாய்), நாளையும் (புதன்கிழமை) இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இறுதிச் சடங்கின் நாளில் ஒரு நாள் மாநிலம் சார்பில் துக்கம் அனுசரிக்கப்படும் (இறுதிச் சடங்கின் தேதி தனித்தனியாக அறிவிக்கப்படும்) மாநிலத்தில் துக்கம் அனுசரிக்கப்படும் நாட்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கும், அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை சரகத்தில் 21 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் : 13 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு
ஞாயிறு 4, மே 2025 9:24:38 AM (IST)

வணிக நிறுவனங்கள் மே 15க்குள் தமிழில் பெயர் பலகை அமைத்திட வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
சனி 3, மே 2025 5:08:01 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி ஆசிாியைக்கு சாதனையாளர் விருது
சனி 3, மே 2025 4:37:24 PM (IST)

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
சனி 3, மே 2025 4:33:08 PM (IST)

திமுக அரசு மீதமுள்ள ஓராண்டுக்காவது சட்டம்-ஒழுங்கைச் சீர்படுத்த வேண்டும் : சீமான் விமர்சனம்
சனி 3, மே 2025 3:52:45 PM (IST)

தோவாளை மலர் சந்தையில் ரூ.2.12 கோடி மதிப்பில் கூடாரம் அமைக்கும் பணி: ஆட்சியர் ஆய்வு!
சனி 3, மே 2025 12:41:52 PM (IST)
