» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எம்.சாண்ட், ஜல்லி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் : ராமதாஸ் அறிக்கை

செவ்வாய் 22, ஏப்ரல் 2025 4:01:46 PM (IST)

தமிழ்நாட்டில் எம்.சாண்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமிழ்நாட்டில் ஜல்லி, எம்.சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலைகள் இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளன. ஒரு யூனிட் ஜல்லி விலை ரூ.4 ஆயிரத்திலிருந்து, ரூ.5 ஆயிரமாகவும், எம்.சாண்ட் விலை ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.6 ஆயிரமாகவும், பி.சாண்ட் விலை ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.7 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த விலை உயர்வுக்குக் காரணம் தமிழக அரசின் தவறான கொள்கைதான்.

தமிழ்நாட்டில் வெட்டி எடுக்கப்படும் கனிமங்களுக்கு கன மீட்டருக்கு ரூ.90 என்ற அளவில் விதிக்கப்பட்டு வந்த ராயல்டி, இப்போது டன் என்ற புதிய அளவில் விதிக்கப்படுவதால் ஒரு கனமீட்டர் கருங்கல்லுக்கு இதுவரை ரூ.90 என்ற அளவில் வசூலிக்கப்பட்டு வந்த ராயல்டி, இப்போது ரூ.165 ஆக உயர்ந்துவிட்டது. அதை மீண்டும் ரூ.90 ஆக குறைப்பதுடன், புதிதாக ஒரு டன்னுக்கு ரூ.90 என்ற விகிதத்தில் விதிக்கப்பட்டுள்ள சிறு கனிம நிலவரியையும் ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கல் குவாரிகள், கிரஷர்கள் மற்றும் சரக்குந்து உரிமையாளர்கள் கடந்த 16-ம் தேதி வேலை நிறுத்தம் மேற்கொண்டு வந்தனர்.

அவர்களின் கோரிக்கைகள் குறித்து இரு முறை பேச்சு நடத்திய தமிழக அரசு, கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்று கூறிவிட்டது. அதற்கு பதிலாக ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவற்றின் விலையை உயர்த்திக் கொள்வதற்கு கல் குவாரிகள் மற்றும் கிரஷர்கள் உரிமையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது. கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வுக்கு இதுதான் காரணம் ஆகும்.

கட்டுமானப் பொருட்களின் விலைகள் ஏற்கனவே மிகவும் அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதனால், கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் கட்டுமானப் பொருள்களின் விலை 25% வரை உயர்த்தப்பட்டிருப்பதால் கட்டுமானப் பணிகள் மேலும் பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதனால், கட்டுமானத் தொழிலாளர்களும் வேலை இழக்கக்கூடும். அப்படி ஒரு நிலை ஏற்படக்கூடாது.

எனவே, தமிழ்நாட்டில் கனிமங்களுக்கு உயர்த்தப்பட்ட ராயல்டியை குறைக்கவும், புதிதாக விதிக்கப்பட்ட சிறு கனிம நில வரி விதிப்பை கைவிடவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் தமிழ்நாட்டில் உயர்த்தப்பட்டுள்ள கட்டுமானப் பொருட்களின் விலைகள் குறைவதற்கு தமிழக அரசு வகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory