» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் : பொன்முடி, செந்தில் பாலாஜி விடுவிப்பு?

வெள்ளி 25, ஏப்ரல் 2025 10:44:46 AM (IST)



தமிழகத்தில் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

வனத்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி அண்மையில் பேசிய பேச்சுக்கள் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தன. பொன்முடியின் பேச்சையடுத்து அவரது கட்சி பதவி பறிக்கப்பட்டது. எனினும், அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அதேபோல, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவியை தொடர்வதில் சிக்கல் எழுந்துள்ளது.

அதாவது, அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 2023 ஜூன் மாதம் கைது செய்தனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு, கடந்த 2024 செப்டம்பர் 26-ம் தேதி செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஒருநாள் இடைவெளியில் மீண்டும் அமைச்சராகவும் பதவியேற்றார். இதனால், செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம்,செந்தில் பாலாஜிக்கு மெரிட் அடிப்படையில் ஜாமீன் வழங்கவில்லை. அரசமைப்பு சட்டத்தின் 21-வது பிரிவை மீறியதால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீன் வழங்கப்பட்ட இரண்டு நாட்களுக்குள் அவர் அமைச்சரானதை ஏற்க முடியாது. அமைச்சராக இல்லை என்பதால்தான் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. எனவே, அவருக்கு ஜாமீன் வேண்டுமா? அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா?' என்று கேள்வி எழுப்பினர். 

மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் கருத்தை தெரிவிக்க 28 வரை கால அவகாசம் வழங்கி, விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இதனால், செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகலாம் என்று சொல்லப்படுகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி வசம் உள்ள மதுவிலக்கு மற்றும் ஆயத்த தீர்வைத்துறை பொறுப்பு, அமைச்சர் முத்துசாமியிடம் வழங்கப்படலாம் எனக்கூறப்படுகிறது. தமிழக அமைச்சரவையில் தற்போது 34 பேர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory