» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசுப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க ஆர்வம் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா தகவல்

புதன் 30, ஏப்ரல் 2025 12:49:55 PM (IST)



அரசு பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதில் பள்ளி முன்னாள் மாணவர்களும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர் என மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார். 

கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் பேரூராட்சிக்குட்பட்ட சொத்தவிளை அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (30.04.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல் படி, அனைத்து அரசு பள்ளிகளிலும் மார்ச் ஒன்றாம் தேதி முதல் 2025 -2026ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 

இன்று சொத்தவிளை அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இன்றைய தினம் மாணவர்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். அரசு பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதில் பள்ளி முன்னாள் மாணவர்களும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை எளிய மக்களும் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிக்கு நிகராக கல்வி கற்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்தோடு, பள்ளிக்கல்வித்துறை வாயிலாக பல்வேறு திட்டங்கள் வகுத்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். 

குறிப்பாக வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மக்களும் நடுத்தர மக்களும் தங்களது குழந்தைகளுக்கு நல்ல கல்வி வழங்க தனியார் பள்ளிகளை நாடுவதால் மாணவர் சேர்க்கை முதல் ஆண்டு கல்வி கட்டணத்திற்கு அதிகளவு செலவு செய்யப்படுகிறது. இதனால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, குழந்தைகளின் கல்வியை இடையில் நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் அரசுதொடக்கப்பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ மாணவியர்களும் பயன்பெற்று வருகின்றனர். மேலும் தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களான விலையில்லா பாடநூல், நோட்டு புத்தகங்கள், கிரையான்ஸ், புத்தகப்பை, காலணி, சீருடை உள்ளிட்டவைகள் மாணவ மாணவியர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து டிஜிட்டல் முறையில் கல்வி கற்க ஸ்மார்ட் வகுப்பறைகள், தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகராக ஆங்கிலம் பேசவதற்கான பயிற்சி, ஆய்வக வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை கல்வி கற்பதற்கான அனைத்து வசதிகளும் அரசுப்பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

மேலும் மாணவர்கள் எளிமையாக புரிதலுடன் கற்று, தொடக்கநிலை கல்வியை முழுமையாக பெற வேண்டும் என்ற நோக்கில் எண்ணும் எழுத்தும் பயிற்சியானது அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் அரும்பு, மொட்டு, மலர் என்ற மூன்று நிலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. தொடர்ந்து சத்துணவு திட்டத்தின் கீழ் மதிய உணவு திட்டம், விலையில்லா மிதிவண்டிகள், இலவச பேருந்து பயண அட்டை, கல்வி உதவித்தொகைகள், இடைநிற்ற மாணவர்கள் தொடர்ந்து கல்வி கற்க உதவித்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. 

தொடர்ந்து 1ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் மாணவர்கள் பயின்று வருவார்கள் எனில், பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பின் உயர்கல்வியில் எளிதாக சேர்வதற்காக 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மேலும் அரசு பள்ளிகளில் படித்து, கல்லூரிகளில் பயில இருக்கும் மாணவர்களுக்கு புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் ஆகிய திட்டங்கள் வாயிலாக மாதம் ரூ.1000 அவர்களது வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் 12ம் வகுப்புக்கு பின் உயர்கல்வி பயில அவர்களுக்கு JEE, NEET உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுவதோடு, மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டு பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகிறது.

இதன் வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசுப்பள்ளி மாணவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் கல்வி கற்க தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதோடு, மாணவர்களின் எதிர்காலத்தினை தன்னநம்பிக்கையுடன் எதிர்கொள்ள அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது. எனவே கன்னியாகுமரி மாவட்ட மக்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்த்து, பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் அரசு பள்ளிகளில் அதிகமான மாணவர்களை சேர்க்க தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டவர்கள் அதிக அக்கறையுடன் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

ஆய்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதாண்டாயுதபாணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பள்ளிகல்வி சராதா, தலைமையாசிரியர், துறை அலுவலர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory