» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக ஆட்சிக்கு தொழிலாளர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

வியாழன் 1, மே 2025 11:13:08 AM (IST)

உங்களுக்காக உழைக்கிற திமுக ஆட்சிக்கு தொழிலாளர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று முதல்வர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சர்வதேச உழைப்பாளர்கள் தினம் இன்று கொண்டாப்படுவதை முன்னிட்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உள்ள மே தின நினைவு சின்னத்திற்கு சிவப்பு சட்டை அணிந்து சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அவருடன் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி.க்கள், அரசு அதிகாரிகள், திமுக தொழிற்சங்கமான தொ.மு.ச. பேரவை நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: குருதியை வியர்வையாக்கி உழைப்பால் உலகை உயர்த்தும் உழைப்பாளர்களுக்கு வாழ்த்துகள். உருண்டோடுகின்ற ரெயிலை ஓட்டக்கூடியவர் ஒரு தொழிலாளி தான். இழையை நூற்று நல்லாடையை நெய்பவரும் தொழிலாளி தான். இரும்பு காய்ச்சி உருக்குபவனும் தொழிலாளி தான். உழுது நன்செய் பயிரிடுபவரும் தொழிலாளி தான்.

மே தின பூங்காவை அமைத்து அங்கு நினைவுச் சின்னத்தை உருவாக்கியவர் கருணாநிதி. மே 1 விடுமுறை என்று கொண்டு வந்தவர் அண்ணா, அதை சட்டமாக்கியவர் கருணாநிதி. தொழிலாளர்கள் வளர்ச்சிக்கு திமுக முக்கியத்துவம் அளித்து வருகிறது. திராவிடர்கள் என்றாலே தொழிலாளர்கள்தான். தொழிலாளர்கள் நலன் காக்கும் திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. திமுக ஆட்சியில் 26 லட்சம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.2,461 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முதலீட்டு செய்யும் நிறுவனங்களிடம் கையெழுத்தாகும்போது எவ்வளவு பேருக்கு வேலை கிடைக்கும் என்றுதான் முதலில் கேட்பேன். இது சாமானியர்களின் ஆட்சி, உங்களுடன் நிற்கும் உங்களின் ஒருவன் தான் நான்; திமுக ஆட்சி அமைந்து 4 ஆண்டுகள் நிறைவு செய்து 5 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்க உள்ளோம். உங்களுக்காக உழைக்கிற திமுக ஆட்சிக்கு தொழிலாளர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory