» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வரலாறு காணாத ஜிஎஸ்டி வரி குறைப்பு: மத்திய அரசுக்கு நயினார் நாகேந்திரன் நன்றி

வியாழன் 4, செப்டம்பர் 2025 12:05:54 PM (IST)

வரலாறு காணாத ஜிஎஸ்டி வரி குறைப்பை அமல்படுத்திய மத்திய அரசுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நன்றி  தெரிவித்துள்ளார். 

இந்தியா முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை உறுதி செய்யும் ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு வந்தது. கலால் வரி, வாட், சேவை வரி போன்ற பல்வேறு மறைமுக வரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு ஜி.எஸ்.டி. என்ற ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்பட்டன.

நாட்டின் மறைமுக வரி அமைப்பில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்த இந்த ஜி.எஸ்.டி. 4 அடுக்குகளை கொண்டிருந்தது. அதன்படி 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என 4 வகையான வரி விகிதத்தின் கீழ் அனைத்துப்பொருட்கள் மற்றும் சேவைகள் ஒருங்கிணைக்கப்பட்டன. ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்து 8 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இந்த ஜி.எஸ்.டி. விகிதங்களை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பிரதமர் மோடி கடந்த மாதம் சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது செங்கோட்டையில் ஆற்றிய உரையில் இதை அறிவித்தார். இது மக்களுக்கு தீபாவளி பரிசாக அமையும் என்றும் அவர் கூறினார். பிரதமர் அறிவிப்பை தொடர்ந்து ஜி.எஸ்.டி. வரி விகிதக்குறைப்பை நிதியமைச்சகம் வெளியிட்டது. இதை அடுத்த தலைமுறை ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் எனவும், ஜி.எஸ்.டி 2.0 எனவும் அறிவித்தது.

அதன்படி 4 அடுக்கு ஜி.எஸ்.டி. 2 அடுக்காக குறைக்கப்படுகிறது. வெறும் 5 மற்றும் 18 சதவீத அடுக்குகளை மட்டுமே கொண்டிருக்கும் வகையில் வரி விகிதம் மாற்றப்பட்டு உள்ளது. அதேநேரம் சிகரெட் மற்றும் புகையிலை, பான் மசாலா போன்ற பாவப்பொருட்கள் மற்றும் சொகுசு கார் போன்ற உயர் ரக ஆடம்பர பொருட்கள், குளிர் பானங்கள் ஆகியவற்றுக்காக 40 சதவீத சிறப்பு வரி அடுக்கும் அறிமுகம் செய்யப்படுகிறது.

இந்த நடைமுறை வருகிற 22-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த வரி குறைப்பு மூலம் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலை கணிசமாக குறையும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் மக்களின் வாழ்க்கை செலவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் வரலாறு காணாத ஜிஎஸ்டி வரி குறைப்பை அமல்படுத்திய மத்திய அரசுக்கு நன்றி என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையில் கூறியிருந்ததைப் போலவே தீபாவளியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஓர் இன்பச் செய்தியாக ஜிஎஸ்டி வரியைக் குறைத்து நாட்டு மக்களை இன்பத்தில் ஆழ்த்தியுள்ளார்.

ஏழை, எளிய மக்கள், நடுத்தர வர்க்கத்தினர், விவசாயிகள், பெண்கள், சிறு-குறு வணிகர்கள் என அனைத்து தரப்பினரும் பயனடையும் வகையில் உள்ள இந்த வரலாறு காணாத ஜிஎஸ்டி வரி குறைப்பை அமல்படுத்திய நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசிற்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!" என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory