» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்செந்தூர் கோவிலில் பிரேக்கிங் தரிசன முறை: வாபஸ் பெற இந்து முன்னணி வலியுறுத்தல்!

சனி 6, செப்டம்பர் 2025 5:26:52 PM (IST)

திருச்செந்தூர் உள்ளிட்ட கோவில்களில் பிரேக்கிங் தரிசன கட்டணமுறையை வாபஸ் பெற வேண்டும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமிழக சட்டமன்ற 2025-2026 மானிய கோரிக்கை எண் 47-ன் படி பெருவாரியான பக்தர்கள் வருகை தருகின்ற திருக்கோவில்களில் பிரேக்கிங் தரிசன முறை ஏற்படுத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். பெரிய கோவில் வரிசையில் திருச்செந்தூரில் இது முதலாவதாக அமல்படுத்தப்படும் என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பெருவாரியான பக்தர்களை சோதனைக்கு உள்ளாக்கும் முயற்சியாகவே இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வருகின்ற சிறிய மற்றும் பெரிய கோவில்களின் நிலைமை பரிதாபகரமான நிலையில் உள்ளது.

திருவிழாக்கால சிறப்பு பேருந்து கட்டணம், சிறப்பு தரிசன கட்டணம், வாகன நிறுத்த கட்டணம், பிரசாத கட்டணம் என வசூல் கொள்ளை செய்யும் நிலையங்களாக அறநிலையத்துறை மாறி இருக்கிறது. இதில் பெரிய கோவில்களில் பிரேக்கிங் தரிசன கட்டணமுறை என்பது திராவிட மாடல் அரசின் பகல் கொள்ளையையே காட்டுகிறது.

ஆகம விதிகளின்படி மதியம் உச்சி பூஜை முடிந்த பிறகு கோயில்களை சாத்துவது என்பது வழக்கமாக உள்ளது. ஆனால் கட்டணம் வசூலிக்கும் நோக்கோடு ஆகம விதிகளுக்கு எதிராக மதியம் 3 மணி முதல் 4 மணி வரை கோவில்களை திறந்து வைக்கலாம் என அறநிலையத்துறை முடிவு எடுத்துள்ளது.

இடை நிறுத்த தரிசனமே தவறு என்கிற போது 500 ரூபாய் கட்டணம் வசூலிப்பது கடவுளை காட்சிப் பொருளாக்கும் நியாயமற்ற அரசின் நிர்வாகத்தைக் காட்டுகிறது. ஏற்கெனவே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மதியம் ஒரு மணிக்கு மேலாக கட்டணம் பெற்றுக்கொண்டு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது பொதுமக்களிடையே பெரும் கோபத்தை உண்டாக்கியுள்ளது. சினிமா தியேட்டர்கள் போன்று காலை, மதியம், இரவு காட்சி என கோவில்களை மாற்றுவது கோவில்களின் பாரம்பரியத்தை அழிக்கும் செயலாகும்.

திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம் முடிந்த பிறகு கடந்த இரண்டு மாத காலமாக திருச்செந்தூரில் முருகனை தரிசனம் செய்ய பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருக்கக்கூடிய அவல நிலையை காண முடிகிறது. ஏழை பக்தர்கள் வரிசையில் நின்றிருக்க ஒருபுறம் கட்டண தரிசனமும், மறுபுறம் கையில் காசை வாங்கிக்கொண்டு தரிசனத்திற்கு ஒரு சிலரை அனுமதிப்பதும் பக்தர்களை பெரும் அவதிக்குள்ளாக்கி வருகிறது.

முருகனின் அறுபடை வீடான திருத்தணியில் கோவில் ஊழியர்களுக்கும் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கும் தொடர்ந்து கைகலப்பு ஏற்படுவதும் தரிசன முறைக்கு பணம் பெற்றுக் கொண்டு ஒரு சிலரை உள்ளே விடுவதால்தான் என்றும் பத்திரிகைகளில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஒரு பக்கம் கோவில்களில் எந்த விதமான அடிப்படை வசதிகளும் பக்தர்களுக்கு செய்து தருவதில்லை. மறுபுறம் சிதிலமடைந்த கோவில்களை செப்பனிடுவதும் இல்லை.

பெரிய கோவில்களின் வருமானத்தையும் உண்டியல் பணத்தையும் எடுத்துக் கொள்ளக்கூடிய அறநிலையத்துறை சிறிய கோவில்களில் ஒரு கால பூஜையைப் பற்றி கூட கவலைப்படுவதில்லை. 37 ஆயிரம் கோவில்களில் விளக்கு எரியும் வசதி இல்லை என நீதிமன்றத்தில் தமிழக அரசு தன் வாதத்தை எடுத்து வைக்கிறது. அறநிலையத்துறையின் அவலங்களை நீதிமன்றம் பலமுறை கண்டித்தும் கூட இதுவரை கோவில்கள் விஷயத்தில் தமிழக அரசு அக்கறையின்றி இருந்து வருகிறது.

பிரேக்கிங் தரிசன கட்டணத்தின் அரசாணையின் முன் உதாரணமாக திருச்செந்தூர் கோவிலில் திருவிழா காலங்களை கழித்து மீதமுள்ள நாட்களில் இடை நிறுத்த தரிசனம் அமல்படுத்தப்படும் என்றும் அது குறித்த ஆட்சேபனைகள், ஆலோசனைகளை வழங்கலாம் என்றும் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகளில் கோவில் இடிப்பு, தரிசன கட்டணம் உயர்வு, கும்பாபிஷேகத்தில் முறைகேடு என அறநிலையத்துறையின் மீது பல்வேறு புகார்கள் எழுந்தபடியே உள்ளன. எந்த ஆட்சிக் காலத்திலும் இல்லாத அளவிற்கு கோவில்களின் பாரம்பரியம் நடைமுறைகள் அழிக்கப்பட்டு வருகின்றன. கடவுள் மறுப்புக் கொள்கை உடைய திமுக அதன் நிஜ முகத்தை காட்டுகிறதா? என்ற கேள்வியும் தமிழக மக்களிடம் எழுந்திருக்கிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவத்திற்கு கூட ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என முதலில் அறநிலையத்துறை அறிவித்திருந்தது. இதை பக்தர்கள் கடுமையாக எதிர்த்ததால், இந்த கட்டடண தரிசன முறை ரத்து செய்யப்பட்டது.

திமுக ஆட்சியில் நடந்த பல பெரிய கோவில்களின் கும்பாபிஷேகத்தில் பொதுமக்களும் பக்தர்களும் கும்பாபிஷேக நிகழ்வுக்கு அனுமதிக்கப்படவில்லை. மாறாக திமுகவினரும் அவர்களது குடும்பத்தினரும் மட்டுமே அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். திருச்செந்தூரில் பால்காவடி எடுத்து வந்த பக்தர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறையால் தாக்கப்பட்டனர். 

இப்படியாக அறநிலையத்துறையிடமிருந்து கோவில்களுக்கு எப்போது விடிவு காலம் பிறக்கும் என மக்கள் ஏங்கிக் கொண்டிருந்த வேளையில் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போன்று, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று இடைநிறுத்த தரிசனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது அறநிலையத்துறை. தனது முடிவை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். தவிர்க்கும் பட்சத்தில் ஒட்டுமொத்த இந்துக்களின் கோபத்திற்கு ஆளும் திமுக அரசு ஆளாக நேரிடும் எனவும் தெரிவித்துக் கொள்கிறோம்.

பல்வேறு ஆன்மீக அமைப்புகள், பக்தர்கள், பொதுமக்கள், சமூக சிந்தனையாளர்கள் ஆகியோரின் எதிர்ப்புக்கிணங்க மானிய கோரிக்கையின் பிரேக்கிங் தரிசன கட்டண முறையை உடனடியாக தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும் என இந்து முன்னணி இயக்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory