» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பஸ்சில் பெண்ணிடம் நகை திருடிய தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவி கைது

ஞாயிறு 7, செப்டம்பர் 2025 9:38:19 AM (IST)

சென்னை கோயம்பேட்டில் பஸ்சில் பெண்ணிடம் நகை திருடிய தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவி கைது செய்யப்பட்டார்.

சென்னை நெற்குன்றம், ரெட்டி தெருவைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி வரலட்சுமி (50). கடந்த ஜூலை மாதம் காஞ்சீபுரத்தில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு அரசு பஸ்சில் குழந்தைகளுடன் வீட்டுக்கு வந்தார்.

முன்னதாக பஸ்சில் இடம் பிடிப்பதற்காக தனது பையை பஸ் பக்கவாட்டு வழியாக சீட்டில் வைத்துவிட்டு, படிக்கட்டு வழியாக உள்ளே ஏறி சென்றார். அப்போது அவரது பை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அப்போது பின் இருக்கையில் அமர்ந்து இருந்த பெண், வரலட்சுமியிடம் நான் உங்கள் பையை பத்திரமாக எடுத்து வைத்து உள்ளேன் என்று கூறி பையை அவரிடம் கொடுத்து விட்டு, சிறிது நேரத்தில் பஸ்சில் இருந்து கீழே இறங்கி சென்றுவிட்டார்.

வரலட்சுமி வீட்டுக்கு சென்ற பிறகு தனது பையில் வைத்திருந்த 2½ பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கோயம்பேடு போலீசில் புகார் செய்தார். பஸ்சில் பின்இருக்கையில் அமர்ந்து இருந்த பெண் மீது சந்தேகம் இருப்பதாகவும் புகாரில் கூறி இருந்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது வரலட்சுமி பயணம் செய்த பஸ்சில் இருந்து சந்தேகப்படும்படியாக பெண் ஒருவர் இறங்கி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் வரலட்சுமியின் நகையை திருடியது திருப்பத்தூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகாவை சேர்ந்த பாரதி (56) என்பதும், இவர் நரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவியாக பதவி வகித்து வருவதும் தெரியவந்தது.

தி.மு.க.வைச் சேர்ந்த பாரதியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் வரலட்சுமியின் பையில் இருந்த நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார். அவர் மீது ஏற்கனவே ஆம்பூர், வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் நகை திருட்டு வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

ஊராட்சி மன்ற தலைவியான பிறகு திருட்டை விட்டுவிடுமாறு அவரது உறவினர்கள், நண்பர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ஆனாலும் அவர், பழசை மறக்காமல் தொடர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.


மக்கள் கருத்து

உண்மSep 7, 2025 - 11:11:32 AM | Posted IP 104.2*****

திமுக வில் திருட்டு பயலுக எல்லாம் அதிகம்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory