» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் : சபாநாயகர் மு.அப்பாவு வழங்கினார்

சனி 3, ஜனவரி 2026 4:19:36 PM (IST)



திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு வழங்கினார்.

திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் ஆசிரியர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சியில் 2024 -25ஆம் கல்வியாண்டில் மாவட்டத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி அளித்த ஆசிரியர்களுக்கும் மற்றும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் ஒளிரும் ஆசிரியர் விருதுகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.இரா.சுகுமார் தலைமையில், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வஹாப், மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்கள்.

பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஆசிரியர்களை கொண்டாடுவோம் நிகழ்ச்சியில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 1726 ஆசிரியர்களுக்கு 100 சதவீதம் தேர்ச்சி கொடுத்தமைக்காக பாராட்டு சான்றிதழ்களும் 200 ஆசிரியர்களுக்கு ஒளிரும் ஆசிரியர் விருதுகளும் வழங்கப்பட்டது. சிறந்த பள்ளிகளுக்கான விருது, சிறந்த பள்ளி மேலாண்மை குழுக்கான விருது, சிறந்த பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கான விருது, சிறந்த முன்னாள் மாணவர் அமைப்புக்கான விருது போன்ற விருதுகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, வழங்கினார்கள்.

திருநெல்வேலி மாவட்டம் கடந்த ஆண்டில் பத்தாம் வகுப்பு தேர்வில் 21 வது இடமும் 12 ஆம் வகுப்பு தேர்வில் 16வது இடமும் பெற்றது. இந்த ஆண்டு அதிக தேர்ச்சியை அழித்து முதல் ஐந்து இடத்திற்குள் வருவதற்காகவும், ஆசிரியர்களை ஊக்கப்படுத்தவதற்காகவும், கடந்த ஆண்டு நூறு சதவீத தேர்ச்சி அளித்த ஆசிரியர்களை கௌரவப்படுத்துவதற்காகவும் ஆசிரியர்களை கொண்டாடுவோம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்ததாவது; தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ள ஆசிரியர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன். சமூகத்தில் ஆசிரியர்கள் மிகவும் உயர்வில் உள்ளார்கள். மாணவர்கள் நல்வழியில் செல்வதற்கும் மற்றும் உயர் பதவி அடைவதற்கும் ஆசிரியர்கள் உறுதுணையாக செயல்பட்டு வருகிறார்கள். ஆசிரியர்களின் பங்களிப்பு சமூகத்தில் மிகவும் முக்கியமானதாக ஒன்றாக கருதப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வி கற்று கொடுக்கும் ஆசிரியர்கள் தகுதியின் அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள். 

அரசு மருத்துவமனையில் எப்படி தகுதி வாய்ந்த மருத்துவர்கள் இருக்கிறார்களோ அதே போன்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இருக்கிறார்கள் இது பெருமைப்பட கூடிய ஒன்றாக உள்ளது. ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு கொண்டு வந்தது முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் . 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பெண் ஆசிரியர்கள் பாடம் கற்று கொடுக்க வேண்டும் என்ற புதிய விதிமுறைகளை கொண்டு வந்தார்கள். அந்த வழியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு முதலமைச்சர் கல்விக்காக சுமார் ரூ.50 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவியர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறார்கள். மெட்ரிக்குலேசன் பாடத்திட்டமும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பாடத்திட்டம் ஒன்றுதான். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பயிலுவதற்கு ஊக்கவிக்கும் வகையில் தமிழ்ப்புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டம் மூலம் மாதம் ரூ.1000 ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 

ஆசிரியர் பணி என்பது மிகவும் பெருமைப்பட கூடிய பணி அப்படிப்பட்ட பணியை செய்து வரும் ஆசிரியர்களுக்கு இது போன்ற நிகழ்ச்சியினை தமிழ்நாடு முதலமைச்சர் கொண்டு வந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். ஆசிரியர் பணியை செய்து வரும் ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் கிறித்துவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத் தலைவர் விஜிலா சத்தியானந்த், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார், உதவி திட்ட அலுவலர் அருணா தமிழ்மலர், மாவட்ட கல்வி அலுவலர் சாய் சுப்புலெட்சுமி, முத்துராஜ், ராமசாமி, சிவராஜ், சுற்று சுழல் ஒருங்கிணைப்பாளர் கணேசன் மற்றும் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory