» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சிறுமியை கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை : சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

செவ்வாய் 6, ஜனவரி 2026 8:35:18 AM (IST)

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கொடூர தந்தைக்கு தூக்கு தண்டனை விதித்து நெல்லை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு கூறியது.

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 43 வயதுடைய விறகு வெட்டும் தொழிலாளிக்கு 2 மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவிக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். தொழிலாளி தனது முதல் மனைவியை பிரிந்து 2-வது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. 15 வயதான 2-வது மகள் அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்புடன் தனது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார்.

பெற்றோர் கூலிவேலைக்கு சென்ற பின்னர் 2-வது மகள்தான் வீட்டு வேலைகளை கவனித்து வந்தாள். அவளுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவளை, தாயார் அருகே உள்ள ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார்.

அங்கு பரிசோதித்த டாக்டர், அந்த சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த தாயார், தனது மகளிடம் விசாரித்தார். அப்போது, தொழிலாளியான தனது கணவன் தான் மகளின் கர்ப்பத்திற்கு காரணம் என தெரியவந்தது. மேலும் அவர் அந்த சிறுமியை 2 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து சிறுமியின் தாயார் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் அப்போதைய இன்ஸ்பெக்டர் சிவகளை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து தொழிலாளியை கைது செய்தார். இன்ஸ்பெக்டா் கவுரி மனோகரி அந்த தொழிலாளி மீது குற்றப்பத்திரிக்கை தயார் செய்தார்.

இதற்கிடையே, அந்த சிறுமியின் கர்ப்பம் கலைந்தது. எனவே, திசு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மரபணு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அந்த சோதனை அறிக்கை கடந்த 10.10.2025 அன்று வந்தது. அதில் சிறுமியின் கர்ப்பத்துக்கு அவரது தந்தையான தொழிலாளியே காரணம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமாா் முன்னிலையில் இறுதி விசாரணைக்கு வந்தது. பெற்ற மகளையே கர்ப்பமாக்கிய கொடூர தந்தை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, குற்றவாளியை அழைத்த நீதிபதி, "பெற்ற மகளையே தந்தை கற்பழித்தது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அதுவும் அந்த சிறுமி பலமுறை கற்பழிக்கப்பட்டு உள்ளார். உங்களுக்கு உச்சபட்ச தண்டனை கொடுக்க வேண்டும் என உங்கள் மனைவி, மகள் தெரிவித்து உள்ளனர். ஆகவே உங்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கிறேன்” என அதிரடியாக தீா்ப்பு கூறினார். மேலும் அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும் தமிழக அரசு, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் உஷா ஆஜரானார். வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர உதவியாக இருந்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி பிரசன்னகுமார் பாராட்டு தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory