» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்செந்தூர் - சென்னை இடையே வந்தே பாரத் ரயில்: மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல்!

திங்கள் 29, ஜூன் 2026 8:42:53 AM (IST)



திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

மத்திய  தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல். முருகன் நேற்று காலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் சென்று சத்ரு சம்ஹார பூஜை செய்து சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் அமிர்த் பாரத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் எல். முருகன் கூறியதாவது: தமிழகத்தில் அமிர்த் பாரத் திட்டத்தின்கீழ் 77 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் திருநெல்வேலி - தூத்துக்குடி பிராந்தியத்திற்கு உட்பட்ட திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் மட்டும் ரூ.16 கோடி செலவில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதால், கூடுதலாக அடிப்படை வசதிகள் செய்வது குறித்துப் பரிசீலிக்கப்படும்.

பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காகத் திருச்செந்தூரில் இருந்து சென்னை மற்றும் கோவைக்குக் கூடுதலாக ரயில்களை இயக்கப் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, திருச்செந்தூர் - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

சென்னை - நாகர்கோவில் இடையேயான இரட்டை ரயில் பாதை மின்மயமாக்கல் பணிகள் தற்போது முழுமையாக முடிவடைந்துள்ளன. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, நான்குவழி, ஆறுவழி மற்றும் எட்டுவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதுதவிர, சென்னை - பெங்களூரு, பெங்களூரு - ஐதராபாத், ஐதராபாத் - சென்னை இடையிலான புல்லட் ரயில் திட்டங்கள் சாத்தியமாக்கப்பட்டுள்ளன.

அடுத்த ஆண்டு அகமதாபாத்தில் இருந்து மும்பைக்குப் புல்லட் ரயில் இயக்கப்பட உள்ளது. தற்போது தமிழ்நாட்டில் மட்டும் 15 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது தென்னக ரயில்வே கூடுதல் கோட்ட மேலாளர் பிரசன்னா, மூத்த வணிக மேலாளர் கணேஷ், வணிக ஆய்வாளர் அரவிந்த், நிலைய மேலாளர் வனராஜ், திருச்செந்தூர் உதவி கலெக்டர் கவுதம் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory